தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட தாசில்தார்கள் அதிரடி மாற்றம்!

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு  உத்தரவிட்டதாகக் கூறப்படும் தாசில்தார்கள், இன்று  அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   

தாசில்தார்கள்


ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த, 22ம் தேதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது நடந்த கலவரத்தில், போலீஸார்  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நடந்த சில நாள்கள் வரை,  துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? என மக்கள், அனைத்துக் கட்சிகள் எனப் பலரும் கேள்வி எழுப்பியும் பதில் தெரியாத குழப்பமான நிலை நிலவியது.

இந்நிலையில் திடீரென, கடந்த 28 ம் தேதி, சேகர், கண்ணன், சந்திரன் என்கிற துணை தாசில்தார்கள், உயர் அதிகாரிகள் இல்லாத நிலையில், நெருக்கடி சூழ்நிலையைச் சமாளிக்க தாங்கள்தான் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாகக் காவல் துறையில் புகார் தெரிவித்தனர். இவர்களில், ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு  உத்தரவிட்டதாக தேர்தல் பிரிவு தனித் துணை தாசில்தார் சேகர், சிப்காட் காவல் நிலையத்திலும், கோட்டக் கலால் அலுவலர் கண்ணன் என்பவர் திரேஸ்புரம் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக வடக்கு காவல் நிலையத்திலும், அண்ணாநகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு, சந்திரன் என்கிற துணை தாசி்ல்தார் உத்தரவிட்டதாக தெற்கு காவல் நிலையத்திலும் புகார் அளித்ததாக தகவல்கள் வெளியாயின. 

இந்த 3 பேர் அளித்த புகார், 3 காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கையிலும் பதிவு செய்யப்பட்டது. முந்தைய ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் முந்தைய காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் துப்பாக்கிச் சூடு நடந்த 3வது நாளே அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அத்துடன் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் பெரும்பாலானவர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

துாத்துக்குடி கோட்ட கலால் அலுவலராகப் பணியாற்றி வந்த சந்திரன், 6ம் தேதி, தூத்துக்குடி நகர நிலவரித் திட்டம்  தனிவட்டாட்சியராக  மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல், இன்று, மண்டல துணை வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த கண்ணன், கயத்தாறு துணை வட்டாட்சியராகவும், தேர்தல் தனித்துணை வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த சேகர் அவரது சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  

இதற்கான உத்தரவை நேற்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார். பதவி உயர்வாகவோ, தண்டனையாகவோ இல்லாமல், சம்பந்தபட்ட இடங்களில் ஆட்கள் தேவைப்பட்டதால் இந்தப் பணி மாற்றம் நடந்திருப்பதாக ஆட்சியர் வட்டாரங்கள் தெரிவித்திருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளன. இவர்கள் 3 பேர் மட்டும் அல்லாமல் இவர்களுடன், தாசில்தார்கள் துணை தாசில்தார்கள்,  வருவாய் அலுவலர்கள் என 9 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!