வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (08/06/2018)

கடைசி தொடர்பு:23:30 (08/06/2018)

எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.13 லட்சம் ரூபாய் மட்டும் வசூலிக்க வேண்டும்!

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ் இளங்கலை மருத்துவப் படிப்பில் படிக்கும் மாணவ மாணவிகளிடம் இனி ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.13 லட்சம் மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

உயர்நீதிமன்றம்  எம்.பி.பி.எஸ்

``தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயங்கிவரும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், எம்.பி.பி.எஸ் இளநிலை மருத்துவப் படிப்பில், எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி அதிகப்படியான கட்டணங்களை மாணவர்களிடம் வசூலிப்பதாகவும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை முறையாக நிர்ணயிக்கக் கோரியும் ஜவஹர் சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டபின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில்,`நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் வசூலிக்கப்படும் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணங்களை நிர்ணயிக்க ஏற்கெனவே குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு 4 மாதங்களுக்குள் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு மாணவர்களிடம் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.13 லட்சம் மட்டுமே வசூலிக்க வேண்டும்' எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.