வெளியிடப்பட்ட நேரம்: 01:10 (09/06/2018)

கடைசி தொடர்பு:11:11 (09/06/2018)

பி.ஜே.பி-யின் குரலாக ரஜினி - விளாசும் கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.

கே.பாலகிருஷ்ணன்

அப்போது அவர், 'திருச்சியில் வரும் 14-ம் தேதி பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசை அப்புறப்படுத்தும் நோக்கோடு விழிப்புணர்வு பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அகில இந்திய தலைவர் சீத்தாராம் யெச்சுரி பங்கேற்கிறார். நீட் விவகாரத்தில் தற்கொலை தீர்வாக அமையாது. ஆனால் மாணவர்களின் எதிர்காலத்தை நசுக்கும் நீட்டை ரத்து செய்ய அனைத்துக் கட்சிகளும் இணைந்து போராட வேண்டும்.

தமிழக சட்டமன்றத்தில், தொழில்துறை மானியக்கோரிக்கையில் சிறு, குறு நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாக தெரிவித்துள்ளன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி உள்ளிட்டவற்றால் தொழில்துறை முடங்கி உள்ளது. விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுக்கிறது. காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு முதல் கூட்டம் கூட நடக்கவில்லை. ஜீன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது. தமிழகத்தில் நிலவும் மணல் கொள்ளையைத் தடுக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அரசுப் பள்ளிகளை முறையாகப் பராமரிக்காமல் அதை மூடிவிட்டு டாஸ்மாக் கடைகளை இந்த அரசு திறக்கிறது. தமிழக அரசு நிர்வாகத்தில் படுதோல்வி அடைந்துள்ளதை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் காட்டியுள்ளது. இப்படியான பல்வேறு பிரச்னைகள் இருக்கும்போது மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டத் திட்டங்களை அரசு செயல்படுத்தப் பார்க்கிறது. மத்திய, மாநில அரசுகள் இந்தியாவையும், தமிழகத்தையும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு விற்கிறது. பா.ஜ.கவை வீழ்த்த மதச்சார்பற்ற கட்சிகளோடு தேர்தல் நேரத்தில் கைகோர்ப்பது என்கிற முடிவை எடுத்துள்ளோம். தேர்தல் நேரத்தில் அதற்கான யுக்தியைக் கையாளுவோம்.

ரஜினியின் கருத்து மக்களுக்கு எதிராகத்தான் உள்ளது. அரசே தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குறித்து கருத்து தெரிவிக்காதபோது ரஜினி மக்களைச் சமூக விரோதி எனக் கூறியுள்ளார். மக்களுக்கும் அரசுக்கும் எதிராக இருக்கிற ஸ்டெர்லைட் ஆலையை அவர் சமூக விரோதி எனக் கூற மறுக்கிறார். மக்களை இழிவுப்படுத்தும் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். ரஜினி பா.ஜ.க மற்றும் எடப்பாடி பழனிசாமியின் குரலாக ஒலிக்கிறார்.

நடிக்க வாய்ப்பில்லாததால் அரசியலுக்கு வந்துள்ள கமல்ஹாசன் கருத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள். அவருக்கு அரசியல் அனுபவமில்லை. ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பிரணாப்முகர்ஜி பங்கேற்றது மூலம் அந்த அமைப்பிற்குச் சமூக அந்தஸ்து கொடுத்துள்ளார். மதுக்கடையில் இருந்து கொண்டு மதுபானத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்வது எப்படியோ அது போல தான் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் சகிப்பின்மையைப் பேசியுள்ளது. இதில் அவர் பங்கேற்றிருக்க கூடாது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க