தூத்துக்குடியில் தீ விபத்து..! 10 குடிசைகள் எரிந்து நாசம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கருப்பட்டி காய்ச்சும்போது அடுப்பிலிருந்து தீ பரவியதால், விபத்து ஏற்பட்டு 10 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின.

விளாத்திகுளம் அருகில் உள்ளது சிதம்பரநகர். இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் பனைத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பனை மரங்களில் இருந்து பதநீர் இறங்கி கருப்பட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவரது மகன் ரத்தினம், கருப்பட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். திடீரென, எதிர்பாராத விதமாக கருப்பட்டி தயாரிக்கப் பயன்படுத்திய அடுப்பில் இருந்து தீ பரவியது. இதில், அவரது குடிசை வீடு தீப் பற்றி எரியத் தொடங்கியது. 

தீ விபத்து

அப்பகுதியில் காற்றும் வேகமாக வீசியதால், தீ மளமளவென அருகில் இருந்த குடிசைகளுக்கும் பரவ ஆரம்பித்தது. இது மட்டுமின்றி அப்பகுதியில் இருந்த தங்கம்மாள் என்பவரது வீட்டிற்கும் தீ பரவியது. அப்பகுதி மக்கள் அளித்தத் தகவலின் பேரில், தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீ பரவாமல் கட்டுப்படுத்தி அணைத்தனர். 

இதில் அப்பகுதியைச் சேர்ந்த அந்தோணியம்மாள், பாண்டி, தங்கம்மாள், தங்கமாரியப்பன், ஜெயராஜ், சாலமன்ராஜா, பவுல்ராஜ், ராஜபதி ஆகிய 10 பேரின்  குடிசை வீடுகள் தீயில் எரிந்து கருகியது. 

இந்தக் குடிசை வீடுகளில் இருந்த சமையல் பொருள்கள், ஆடைகள், வீட்டு உபயோகபொருட்கள், தளவாட சாமான்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் என சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலானப் பொருட்கள் தீயில் சாம்பலாகின. மேலும் அப்பகுதியிலிருந்த 20-க்கும் மேற்பட்ட மரங்களும் கருகின. இச்சம்பவம் தொடர்பாக விளாத்திகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!