வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (09/06/2018)

கடைசி தொடர்பு:11:09 (09/06/2018)

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் மேலும் 9 படைப்பிரிவு - ராஜ்நாத் சிங் அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்திவரும் நிலையில், எல்லையோர கிராம மக்களைப் பாதுகாக்கும் வகையில் ஒன்பது படைப்பிரிவுகளை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங்

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக ராஜ்நாத் சிங், இரண்டு நாள் பயணமாக அம்மாநிலத்திற்குச் சென்றார். இந்நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒன்பது படைபிரிவுகளில் இரண்டு பிரிவு, எல்லைப்பகுதிக்கானது. இந்தப்படையினர் பதற்றம் நிறைந்த பகுதிகளிலும், எல்லையோர கிராமங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள். ஜம்மு-காஷ்மீரில் இருந்து இரண்டு பெண்கள் படைப்பிரிவும் பணியில் அமர்த்தப்படும். 

இந்த மாநிலத்தில் குறிப்பாக எல்லைப்பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்களின் கால்நடைகள் உயிரிழந்தால், இதுவரை வழங்கப்பட்ட 30 ஆயிரம் ரூபாய் இனி 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக மூன்று விலங்குகளுக்கு இழப்பீட்டு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வந்தது, தற்போது அந்தக் கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

எல்லைப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பாகிஸ்தான் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத ஐந்து புல்லட் ப்ரூப் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படும். முக்கிய இடங்களில் 14 ஆயிரம் பதுங்கு குழிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க