வெளியிடப்பட்ட நேரம்: 08:43 (09/06/2018)

கடைசி தொடர்பு:11:36 (09/06/2018)

முதன்முறையாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்தியா! - சீனா புறப்பட்ட மோடி

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக டெல்லியிலிருந்து 2 நாள் அரசு முறைப் பயணமாகச் சீனா புறப்பட்டார் நரேந்திர மோடி.

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக டெல்லியிலிருந்து 2 நாள் அரசு முறைப் பயணமாகச் சீனா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

மோடி

 

சர்வதேச அளவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பலம் பொருந்திய அமைப்பாகக் கருதப்படுகிறது. இந்த அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டு குறிப்பிட்ட சில நாடுகளைக் கொண்டு தொடங்கப்பட்டது. இதில் சீனா, பாகிஸ்தான், இந்தியா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தற்போது இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் கடந்த ஆண்டுதான் உறுப்பினர்களாக இணைந்துள்ளன. இந்நிலையில் சீனா கிண்டாவ் நகரில் 2 நாள்கள் (இன்று மற்றும் நாளை) நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்முறையாக இந்தியா கலந்துகொள்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் அரசு முறைப் பயணமாகச் சீனா புறப்பட்டுள்ளார்.

இந்தியா கலந்துகொள்ளும் முதல் மாநாடு என்பதால் சர்வதேச பிரச்னைகள் குறித்து இந்த மாநாட்டில் கருத்துகள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பாகிஸ்தானும் கலந்துகொள்ள உள்ள நிலையில் பயங்கரவாத ஒழிப்பு குறித்து மோடி இம்மாநாட்டில் எடுத்துரைப்பார் எனத் தெரிகிறது. மாநாட்டின் தொடர்ச்சியாகச் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை சந்திக்கிறார் பிரதமர் மோடி. இந்தச் சந்திப்பில் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக மேம்பாடு, எல்லை பிரச்னை, பயங்கரவாதம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இதனிடையே மோடி, பாகிஸ்தான் அதிபரைச் சந்தித்துப் பேசுவது குறித்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருநாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.