வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (09/06/2018)

கடைசி தொடர்பு:11:03 (09/06/2018)

சுற்றுச்சூழல் போராளி முகிலன் 5 வது நாளாகச் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குக் காரணமான அதிகாரிகள்மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுற்றுச்சூழல் போராளியான முகிலன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் 5-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குக் காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுற்றுச்சூழல் போராளியான முகிலன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் 5-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். 

உண்ணாவிரத போராட்டம்

அணு உலை போராட்டத்தின்போது தொடரப்பட்ட வழக்குகளுக்காகக் கைது செய்யப்பட்ட முகிலன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவர், கடந்த 5-ம் தேதி முதல் சிறைக்கு உள்ளேயே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதற்காக ஒரு லட்சம் மக்கள் மீது போடப்பட்ட 132 வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்குப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும்.

ஸ்டெர்லைட் படுகொலைக்கு காரணமான அனைத்துத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302-ன் கீழ், கொலை வழக்குப் பதிவு செய்து அனைவரையும் சிறையில் அடைத்து விசாரணை நடத்த வேண்டும். தொடர்ந்து அணு கதிர்களை வீசி பாதிப்புகளை ஏற்படுத்தும் அணு கழிவுகளை  மக்களுக்குப் பாதிப்பில்லாமல் கூடங்குளத்திலிருந்து உடனடியாக பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

இந்த நிலையில், அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ’தோழர் முகிலன் விடுதலைக்கான ஆதரவு இயக்கம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்’ ஆகிய அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இது தொடர்பாக தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களான மனோ தங்கராஜ், ஆஸ்டின், சுரேஷ்ராஜன், கோ.வி.செழியன், ராமச்சந்திரன், தாயகம் கவி, தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ், தி.மு.க கொறடாவான சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன், சுதர்சனம், வாகை சந்திரசேகர், சேகர்பாபு உள்ளிட்டோரிடம் மனு அளித்தனர்.

கூடங்குளம் அணு உலை போராட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்வது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகிலனை விடுதலை செய்வது ஆகியவை குறித்து தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து தமிழக அரசை வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக உறுதியளித்திருப்பதாக முகிலன் விடுதலைக்கான ஆதரவு இயக்கத்தினர் தெரிவித்தனர்.