ஆர்ப்பரிக்கும் வெள்ளம் - குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகள் அனைத்திலும் தண்ணீர் அளவுக்கு அதிகமாகக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகள் அனைத்திலும் தண்ணீர், அளவுக்கு அதிகமாகக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குளிக்கத் தடை

நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த இரு தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அத்துடன், குற்றால அருவிகளுக்குத் தண்ணீர் வரத்தும் அதிகரித்தது. குற்றாலம், தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் இதமான தென்றல் காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.

அத்துடன், குற்றாலத்தின் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர். இரவு முழுவதும் மலைப் பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. அதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளம் கொட்டியது. மலைப் பகுதியில் காய்ந்து விழுந்துகிடக்கும் கட்டைகள் வெள்ளத்தில் அடித்து வரப்படுவதால், அருவிகளில் குளிப்பதற்கு உகந்த சூழல் இல்லை.

அதனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. அருவியின் நிலையை, வனத்துறையினரும் காவல்துறையினரும் கண்காணித்து வருகிறார்கள். வெள்ளம் குறையத் தொடங்கியதும் மீண்டும் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடையின் காரணமாக ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!