இந்திய நிலத்தடி நீரில் யுரேனியம்! - எச்சரிக்கும் ஆய்வு முடிவு

இந்தியாவில் உள்ள நிலத்தடி நீரில் அதிகமாக யுரேனியம் கலப்படம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது, உலகச் சுகாதார அமைப்பு நிர்ணயம் செய்ததைவிட அதிகமாக உள்ளதாகத் தற்போது வெளியான ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. 

நிலத்தடி நீர்

இந்திய நிலத்தடி நீர் குறித்து, என்விரான்மென்டல் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி லெட்டர்ஸ் என்ற இதழில், கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், `இந்திய மக்கள், குடிநீர் மற்றும் விவசாயத்துக்குப் பயன்படுத்திவரும் ஒரு லிட்டர் நிலத்தடி நீரில் 30 மைக்ரோகிராம் அளவுக்கு மிகுதியாக யுரேனியம் இருக்கிறது. இது, உலகச் சுகாதார அமைப்பு நிர்ணயம் செய்ததைவிட அதிகம். 16 மாநிலங்களில் நிலத்தடி நீரில் யுரேனியம் கலப்படம் உள்ளன. அதிலும், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் 324 கிணறுகளில் உள்ள நீரில் யுரேனியத்தின் அளவு மிகவும் அதிகமாக உள்ளது. மேலும், இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில், முந்தைய நிலத்தடி நீரின் தரத்தை ஒப்பிடுகையில், இந்தியாவின் வடமேற்கு, தெற்கு, தென்கிழக்கு மாநிலங்களில் யுரேனியம் கலப்படம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இயல்பாகவே யுரேனியம் நிலத்தடி நீரில் கலந்திருக்கும். இருப்பினும், நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுதல், நைட்ரேட் மாசு, நிலத்தடி நீர் படிந்திருக்கும் பாறைகளில் இருக்கும் யுரேனியத்தின் அளவு, நிலத்தடி நீரில் இருக்கும் இதர வேதியியல் கூறுகளுடன் யுரேனியம் வினைபுரிவது உள்ளிட்ட காரணங்களால் அபாயகரமான அளவுக்கு யுரேனியம் உயர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன' என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இப்படி, நிலத்தடி நீரில் யுரேனியம் அதிகரிக்கும் பட்சத்தில், அந்த நீரைக் குடித்தால் நாளடைவில் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளதாக ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!