வெளியிடப்பட்ட நேரம்: 11:43 (09/06/2018)

கடைசி தொடர்பு:11:56 (09/06/2018)

பெண்கள் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

பெண்களுக்கான ஆசிய கோப்பைத் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. 

பெண்களுக்கான ஆசிய கோப்பைத் தொடர் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இன்று இந்திய பெண்கள் அணி தன் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொண்டது. இரண்டு அணிகளும் 4 போட்டிகளில் 3-ல் வென்றிருந்ததால், முதலிடத்தைப் பிடிக்கப்போவது யார் என்பதில் இரு அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. 

ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா

Photo Credit: Twitter/BCCIWomen

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. பாகிஸ்தான் அணியின் இந்த முடிவு, அந்த அணிக்கு பெரும் அடியாக அமைந்தது. இந்திய வீராங்கனைகள் சிறப்பாக பந்துவீசி, பாகிஸ்தான் வீராங்கனைகளைக் கட்டுப்படுத்தினர். அந்த அணியின் நஹிதா கான் (18) மற்றும் சனா மிர் (20) தவிர அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெடுக்கள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஏக்தா பிஷித் 3 விக்கெட்டுகள் எடுத்தார். ஷிகா பாண்டே. அனுஜா பாட்டீல், பூனம் யாதவ், தீப்தி ஷர்மா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

ஸ்மிரிதி மந்தானா

Photo Credit: Twitter/BCCIWomen

பின்னர் 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய பெண்கள் அணிக்குத் தொடக்கமே பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீராங்கனை மிதாலி ராஜ் முதல் ஓவரில் டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய தீப்தி ஷர்மாவும் டக் அவுட் ஆக
5 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறியது.

பின்னர் களமிறங்கிய கேப்டன் கவுர், தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தானாவுடன் இணைந்து அணியை மீட்டார். சிறப்பாக விளையாடிய மந்தானா 38 ரன்களில் ஆட்டமிழந்தார். கவுர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்  சென்றார். இறுதியில் இந்தியா 16.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 75 ரன்கள் எடுத்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. புள்ளி பட்டியலில் இந்தியா 5 போட்டிகளில்
4 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. வரும் ஞாயிறு அன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இன்று வங்கதேசப் பெண்கள் மற்றும் மலேசிய பெண்கள் அணிகள் மோதும் போட்டியில் வங்கதேசம் வென்றால் வங்கதேசம் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். வங்கதேசம் தோல்வி அடைந்தால், பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.