விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் படகுக் கட்டணம் அதிகரிப்பு! | kaniyakumari boat fare increases

வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (09/06/2018)

கடைசி தொடர்பு:13:13 (09/06/2018)

விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் படகுக் கட்டணம் அதிகரிப்பு!

கன்னியாகுமரி கடலுக்கு நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவுப்பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் படகுக்கான கட்டணத்தைப் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் உயர்த்தியுள்ளது.

ன்னியாகுமரி கடலுக்கு நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் படகுக்கான கட்டணத்தைப் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் உயர்த்தியுள்ளது.

கன்னியாகுமரி

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி சர்வதேசச் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. ஒளிபொருந்திய மூக்குத்தியுடன் காட்சியளிக்கும் பகவதி அம்மன் கோயில், அகிம்சையைப் போதித்த காந்தி மண்டபம், கடலுக்கு நடுவே பாறைமீது அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எனப் பிரமிக்க வைக்கும் கன்னியாகுமரிக்கு அனைத்து நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். கடலுக்கு நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றுவர பூம்புகார் கப்பல் கழகம் சார்பில் 3 படகுகள் விடப்பட்டுள்ளன. படகில் பயணிப்பதற்காகச் சாதாரண வரிசையில் ரூ.34 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. சிறப்பு வரிசை கட்டணமாக ரூ.169, பள்ளி மாணவர்களுக்கு ரூ.17-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு சேவைக்கான கட்டணத்தை இன்றுமுதல் அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி

அதன்படி 34 ரூபாயாக இருந்த சாதாரண வரிசைக் கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 169 ரூபாயாக இருந்த சிறப்பு வழிக் கட்டணம் 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு 17 ரூபாயாக இருந்த கட்டணம் 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கெனவே கடந்த 2012-ம் ஆண்டில் படகுக் கட்டணத்தை உயர்த்திய பூம்புகார் கப்பல் கழகம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இப்போது கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்தத் திடீர் கட்டண உயர்வு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.