வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (09/06/2018)

கடைசி தொடர்பு:14:20 (09/06/2018)

`பிரதமரே எனக்கு உதவி செய்யுங்கள்’ - மோடிக்கு உத்தரப்பிரதேச வீராங்கனை எழுதிய கடிதம்

உலகக்கோப்பை போட்டியில் கலந்துகொள்ள தனக்கு பண உதவி செய்யுமாறு உத்தரப்பிரதேச துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

வீராங்கனை

சர்வதேசத் துப்பாக்கிச்சுடுதல் கூட்டமைப்பு சார்பில் வரும் ஜூன் 22-ம் தேதி ஜெர்மனியில் உள்ள சுஹல் நகரில் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்பூரைச் சேர்ந்த ப்ரியா சிங் என்ற 19 வயது மாணவி தேர்வாகியுள்ளார். இவர் 50 மீட்டர் துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்துகொள்ள உள்ளார். ஆனால், இவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் வெளிநாடு செல்ல முடியாத நிலையில் ப்ரியா உள்ளார். எனவே, தனக்கு நிதி உதவி செய்யுமாறு பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மேலும், இது தொடர்பாகப் ப்ரியா பேசும்போது, “உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால், நான் ஜெர்மனி செல்வதற்கும் அங்கு தங்குவதற்கும் 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும். என் அப்பா சாதாரண தொழிலாளி என்பதால் அவரால் அந்த பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடியவில்லை. அப்படி இருந்தும் அவர் தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. எனக்கு பண உதவி செய்யுமாறு நான் உத்தரப்பிரதேச முதல்வர் மற்றும் நாட்டின் பிரதமர் ஆகிய இருவருக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன். மேலும், நான் விளையாட்டுத்துறை அமைச்சரைச் சந்திக்க இரண்டு முறை சென்றேன். ஆனால், அந்த இரண்டு முறையும் அவரைப் பார்க்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.