வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (09/06/2018)

கடைசி தொடர்பு:15:30 (09/06/2018)

குறைவான மதிப்பெண்ணைக் காரணம்காட்டி 11-ம் வகுப்புக்கு சீட் தரமறுத்த அரசுப் பள்ளி

எட்டயபுரம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், குறைவான மதிப்பெண்ணைக் காரணம்காட்டி, பதினொன்றாம் வகுப்புக்கு சீட் தர மறுத்திருப்பது ஒரு பெண் குழந்தையின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், எட்டயபுரம் அருகில் உள்ள வாலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிச்சாமி என்பவரின் மகள் அமுதா பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2017-18-ம் கல்வியாண்டில், 10-ம்  வகுப்பு தேர்வு எழுதிய அமுதா, தேர்ச்சி பெற்று 296 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். 

கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 60 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளார். தேர்ச்சி பெற்ற சந்தோஷத்தோடு, தான் படித்த பள்ளியில், பதினொன்றாம் வகுப்பு படிக்க விண்ணப்பிக்கச் சென்ற அமுதாவிடம், "உன் மார்க்குக்கு இங்கே சீட் கிடைக்காது" என்ற பதில் பள்ளியிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் மனம் உடைந்த, மாணவி அமுதா என்ன செய்வது எனத் தெரியாமல், ஆடு மேய்க்கத் தொடங்கியுள்ளார். அமுதா ஏற்கெனவே தாயை இழந்து, அப்பாவின் இரண்டாவது மனைவியான சித்தியின் பராமரிப்பில் உள்ளார். இப்போது படிக்கவும் வாய்ப்பு இல்லாத நிலையில், தன் எதிர்காலத்தை நினைத்துக் கலங்கியுள்ளார். 

அமுதாவுக்கு சீட் மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் அனிதாவிடம் பேசியபோது, "முதலில் சரியாகப் பதில் சொல்லாமல் மழுப்பியவர் பின், எங்கள் பள்ளியில்,  மேக்ஸ்- பயாலஜி, மைக்ரோ பயலாஜி, மேக்ஸ் - கம்யூட்டர் சயின்ஸ் பிரிவுகளே உள்ளன. அந்தப் பெண்ணுக்கு, இந்தப் பிரிவுகள் படிக்கக் கஷ்டமாக இருக்கும் என்பதால் அப்படி சொல்லியிருப்பார்கள். இப்போது அந்தப் பெண் பள்ளிக்கு வந்தால் சீட் தரத் தயாராக இருக்கிறோம்" எனக் கூறினார்.

இந்தப் பள்ளியில், 3 பாடப்பிரிவுகளுக்கும் சேர்த்து, மொத்தம் 120 சீட்டுகள் உள்ளன. இதுவரையில், 80 சீட்டுகள் மட்டுமே நிரம்பியுள்ள நிலையில், அமுதாவுக்கு பள்ளியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. அமுதாவைப் போலவே, இன்னும் சில மாணவிகளுக்கும் சீட்டுகள் மறுக்கப்பட்டன. அவர்கள் அருகில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 5,000 ரூபாய் கொடுத்துச் சேர்ந்துள்ளனர்.

அமுதாவைப் படிக்க வைக்க வசதி இல்லாததால் அவர் அந்தப் பள்ளியில் சேரவில்லை. மகாகவி பாரதியாரின் பெயர் தாங்கி இயங்கி வரும்  ஒரு பள்ளியில், மாணவி ஒருவருக்கு மார்க் காரணம் காட்டி கல்வி மறுக்கப்பட்டிருப்பது பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க