தஞ்சை பெரிய கோயில் நுழைவு வாயிலில் பக்தர்களை விரட்டிய தேனீக்கள்!

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சேதமடைந்த சிலையைச் சீரமைப்பதற்காகச் சாரம் கட்டியபோது கோபுரத்தில் கட்டியிருந்த தேன் கூடு கலைந்து தேனீக்கள் பறக்க ஆரம்பித்தது. அப்போது தேனீக்கள் பக்தர்கள் சிலரைக் கொட்டின. இதனால் பக்தர்கள் நாலா பக்கமும் சிதறி ஓட பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சேதமடைந்த சிலையைச் சீரமைப்பதற்காகச் சாரம் கட்டியபோது கோபுரத்தில் கட்டியிருந்த தேன் கூடு கலைந்து தேனீக்கள் பறக்க ஆரம்பித்தது. அப்போது தேனீக்கள் பக்தர்கள் சிலரைக் கொட்டின. இதனால் பக்தர்கள் நாலா பக்கமும் சிதறி ஓடியதால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தேனீ

உலகப் பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் முதல் நுழைவு வாயிலுக்குக் கேரளானந்தன் நுழைவு வாயில் என்று பெயர். இந்த நுழைவு வாயிலில் கோபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையின்போது இடி தாக்கி சுதையினால் செய்யப்பட்ட யாழி பொம்மை சேதமடைந்தது. இதனையடுத்து அந்தச் சிலையை உடனே சீரமைக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிக்காக இரும்புக் கம்பால் ஆன சாரம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, கேரளாந்தன் நுழைவு வாயில் கோபுரத்தில் கூடுகட்டியிருந்த தேனீக்கள் கூடு கலைந்தது. அதிலிருந்து தேனீக்கள் பறக்கத் தொடங்கின. இந்தத் தேனீக்கள் பறந்து, கோயிலுக்கு வந்த பக்தர்களைக் கொட்டத் தொடங்கின. இதனால் பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

தேனீ

தேனீக்கள் கொட்டியதில் சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகி்ச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், பக்தர்களில் ஒரு பெண் உள்ளிட்ட 5 பேருக்கு தேனீக்கள் கொட்டியதில் காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் மூலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று விடுமுறை தினம் என்பதால் அதிகளவில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்கு வந்தனர். தேனீக்கள் கொட்ட ஆரம்பித்ததால், அவர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கபடவில்லை. கோயில் பணியாளர்கள் கேரளாந்தன் கோபுர நுழைவு வாயில் கேட்டை ஒரு மணி நேரம் மூடினர். இதனால் கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியவில்லை. கோயில் உள்ளே  இருந்த பக்தர்கள் மாற்று வழியில் வெளியேற்றப்பட்டனர். இதனால் கோயில் வளாகம் மட்டும் இல்லாமல் தஞ்சாவூரே பெரும் பரபரப்பு அடைந்தது.

இதற்கிடையில் 45 நிமிடங்கள் கழித்து தீயணைப்புத்துறை  வீரர்கள் வந்தனர். ஆனால், அவர்கள் கோயிலுக்குள் இருந்த தேன் கூட்டை அகற்ற மறுத்துவிட்டனர். ஏற்கெனவே ஒரு முறை இதுபோன்று சம்பவம் நடந்தது. அப்போது தேன் கூட்டைத் தீயணைப்பு வீரர்கள் அகற்றினர். அதற்கு தொல்லியல்துறை அதிகாரிகள் எப்படி எங்கள் அனுமதி இல்லாமல் நீங்கள் இந்தப் பணியில் ஈடுபடலாம் எனக் கூறி தகராறு செய்தனர். அதனால் தற்போது முதலுதவிக்கு மட்டுமே நாங்கள் வந்ததாகத் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

தேனீ

பக்தர்கள் சிலர், `தமிழகம் மற்றும் வெளிநாடுகளிலிருந்துகூட பெரியகோயிலுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகிறார்கள். அதுவும் ராஜாராஜன் சோழன் சிலை வந்தபிறகு அதைக் காணும் ஆர்வத்துடனும் நிறைய பேர் வருகிறார்கள். ஆனால், தொல்லியல் துறை கட்டுபாட்டில் பெரிய கோயில் உள்ளதால் தமிழக அறநிலையத்துறையும் சரியான ஏற்பாடுகள் செய்வதில்லை. தொல்லியல் துறையும் பெரிய கோயிலுக்கும் அங்கு வரும் பக்தர்களுக்கும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதையும் செய்யாமல் மெத்தனம் காட்டுகின்றனர். இதனால் இப்படிப்பட்ட சம்பவங்கள் எல்லாம் நடக்கின்றன’’ என நொந்து கொண்டனர். தேனீக்கள் கொட்டிய சம்பவம், பக்தர்களை உள்ளே அனுமதிக்காதது போன்றவற்றால் பெரும் பரபரப்புடனே காணப்பட்டது பெரிய கோயில் வளாகம்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!