வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (09/06/2018)

கடைசி தொடர்பு:18:53 (11/06/2018)

`புதைத்த 8 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை!' - வைரல் வீடியோ

இறந்துவிட்டதாகக் கருதி புதைக்கப்பட்ட குழந்தை 8 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பிரேசிலில் நிகழ்ந்துள்ளது.

குழந்தை

பிரேசிலில் உள்ள கனரனா பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு போன் வந்துள்ளது. அதில் கனரனா பகுதியில் நிலத்தில் ஏதோ முனகல் சத்தம் கேட்பதாகத் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் போனில் கூறப்பட்ட இடத்தில் தோண்டியுள்ளனர். இதை வீடியோவாக எடுத்து தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். 

வீடியோ தொடங்கும்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் டார்ச் வெளிச்சத்தில் தங்களின் கைகளில் உள்ள சிறிய ஆயுதங்களைக் கொண்டு மெதுவாகத் தோண்டத் தொடங்குகின்றனர். அப்போது அவர்களுக்குக் குழந்தையின் தலை மட்டும் தென்படுகிறது. பின்னர், மிகவும் பொறுமையாகத் தோண்டும்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன இன்னும் தொப்புள் கொடிகூட காயாத நிலையில் குழந்தை  ஒன்று மீட்கப்படுகிறது. இந்தக் காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது. பிறகு, உடனடியாகக் குழந்தையை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்குப் பின்னர், குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

குழந்தை

இதைத்தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் அந்தக் குழந்தையின் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து குழந்தையின் பாட்டி கூறும்போது, ‘வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் என் மகளுக்குப் பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்ததால் கவனிக்க ஆள் இல்லாமல் குழந்தை தரையில் விழுந்து தலையில் பலமாக அடிபட்டது. அதன் பிறகு, குழந்தைக்குப் பேச்சு மூச்சு வரவில்லை. எனவே,  குழந்தை இறந்துவிட்டதாகக் கருதி நாங்கள் புதைத்தோம்’ எனக் கூறியுள்ளார். 

குழந்தை

மேலும் இது குறித்து பேசிய பிரேசில் காவல் துறையினர், ‘குழந்தையின் தாய் 15 வயது மட்டுமே நிரம்பியவர். அதனால் குழந்தை வேண்டாம் எனப் புதைக்கப்பட்டதா அல்லது அவர்கள் கூறியபடி இறந்த பிறகு, புதைக்கப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.