வெளியிடப்பட்ட நேரம்: 18:16 (09/06/2018)

கடைசி தொடர்பு:18:16 (09/06/2018)

நெய்வேலியில் பணத்துக்காக என்.எல்.சி அதிகாரிகளைக் கொலை செய்த நண்பர்கள் கைது!

அசோக்குமார் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துள்ளார். இவர் எப்பொழுதும் நண்பர்களுடன் குடியும், குடித்தனமு£க உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார்

நெய்வேலியில் பணத்துக்காக என்.எல்.சி அதிகாரியைக் கொன்ற நண்பர்களைப் போலீஸார் கைது செய்தனர். 

கொலை

நெய்வேலி வட்டம் கோயம்புத்தூர் சாலையில் வசித்து வந்தவர் அசோக்குமார் (55). இவர் என்.எல்.சி முதல் சுரங்க விரிவாக்க அலுவலகத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார். கேரளாவை சேர்ந்த அசோக்குமார் கிரிக்கெட் வீரராவார். 1985-ம் ஆண்டு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் என்.எல்.சி-யில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்த அசோக்குமார், திருமணம் செய்து ள்ளாமல் தனியாக வசித்து வந்துள்ளார். 

அசோக்குமாருக்குக் குடிப்பழக்கம் இருந்ததாகவும் அதனால் நண்பர்களுடன் அடிக்கடி மது அருந்தும் வழக்கம் கொண்டவராகவும் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 23-ம் தேதி முதல் அசோக்குமாரைக் காணவில்லை. இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் சென்னையில் வசிக்கும் அவரின் சகோதரர் சதிஷ்நன்-க்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நெய்வேலி வந்த சதிஷ்நன், தனது தம்பியின் நண்பர்கள் மற்றும் அலுவலக அதிகாரிகளிடம் விசாரித்திருக்கிறார். ஆனால், அசோக்குமார் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து சதிஷ்நன், தனது தம்பி அசோக்குமாரைக் காணவில்லை என நெய்வேலி டவுன்ஷிப் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து நெய்வேலி போலீஸார் வழக்கு பதிவு செய்த தீவிர விசாரணை நடத்தி வந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அசோக்குமாரின் நண்பர்கள் நெய்வேலி என்.ஜே.வி நகரை சேர்ந்த சுரேஷ்குமார், வடலூரைச் சேர்ந்த ராஜேஷ், காமராஜ் ஆகியோர் பணத்துக்காக அடித்துக் கொலை செய்து, குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெத்தநாயன்கன்பாளையத்தில் புதைத்தது தெரியவந்தது.  இதையடுத்து சம்பவ இடத்துக்கு நெய்வேலி இன்ஸ்பெக்டர் ரவீந்திரநாதன் தலைமையில் சென்ற போலீஸார் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் விஜயா முன்னிலையில் அசோக்குமாரின் உடலைத் தோண்டி எடுத்தனர். புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சம்பவ இடத்திலேயே அவரது உடலைப் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் உடல் அவரின் சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது. 
போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜேஷ், காமராஜ் ஆகிய இருவரும் பணத்துகாக அசோக்குமாரை கொலை செய்து, அவர் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி ரூ.19 லட்சம் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. பணத்துக்காக நண்பர்களே என்.எல்.சி. அதிகாரியைக் கொலை செய்த சம்பவம் நெய்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.