மகளின் துப்பாக்கிச் சுடும் போட்டிக்காக மாட்டை விற்ற பாசக்காரத் தந்தை!

ஜெர்மனியில் நடைபெறும் சர்வதேசத் துப்பாக்கிச் சுடும் போட்டிக்குத் தகுதி பெற்ற நிலையில், அங்கு செல்வதற்குப் போதிய பண வசதி இல்லாததால் ஆசையாக வளர்த்த மாட்டை விற்று மகளின் பயணத்துக்காகப் பணத்தைத் திரட்டினார் பாசக்கரத் தந்தை ஒருவர். ஆனாலும், போதிய பணம் திரட்ட முடியாத நிலையில் தவித்த விளையாட்டு வீராங்கனைக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உதவிட முன்வந்துள்ளார்.

ஜெர்மனியில் நடைபெறும் சர்வதேசத் துப்பாக்கிச் சுடும் போட்டிக்குத் தகுதி பெற்ற நிலையில், அங்கு செல்வதற்குப் போதிய பண வசதி இல்லாததால் ஆசையாக வளர்த்த மாட்டை விற்று மகளின் பயணத்துக்காகப் பணத்தைத் திரட்டினார் பாசக்காரத் தந்தை ஒருவர்.

பிரியா சிங்கின்  பாசக்காரத் தந்தை

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள பீஷ்ம்நகர் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த இல்மா தேவி, பிரிஜ்பால் சிங் தம்பதியினரின் மகள் பிரியா சிங். பட்டியலின குடும்பத்தைச் சேர்ந்த பிரியா சிங், கடந்த 2014-ம் ஆண்டு தேசிய மாணவர் படையில் சேர்ந்தார். அங்கு துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஆர்வம் காட்டிய அவர் 2017 வரையிலும் 17 பதக்கங்களை வென்று திறமையை வெளிப்படுத்தினார். 

சொந்தமாகத் துப்பாக்கிகூட இல்லாத நிலையிலும், விடா முயற்சியால் பயிற்சி பெற்று வாடகை துப்பாக்கி மூலமாகப் போட்டிகளில் பங்கேற்ற அவர் 2016 மற்றும் 2017-ம் வருடங்களில் அகில இந்திய துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். மதிப்பு மிக்க ரக்‌ஷா மந்திரி அவார்ட், கவர்னர் மெடல் போன்றவற்றையும் பெற்றுள்ளார்.

பிரியா சிங்கின் தந்தை பிரிஜ்பால் சிங், தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். அவருக்குக் கிடைக்கும் 10,000 ரூபாய் மாத ஊதியமானது 4 குழந்தைகளின் அன்றாட தேவைகளைச் சமாளிக்கவே போதுமானதாக இருக்கவில்லை. இந்த நிலையில், பிரியா சிங், வரும் 21-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையிலும் ஜெர்மனியில் நடைபெற இருக்கும் சர்வதேசத் துப்பாக்கிச் சுடும் போட்டிக்குத் தேர்வாகி விட்டார்.  

இதற்கான தகுதிச் சுற்றில் பிரியா சிங்கால் 4 வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. இந்தப் போட்டிக்காக 6 பேர் தேர்வாகியுள்ள நிலையில், முதல் 3 இடங்களில் தேர்வானவர்கள் மட்டுமே அரசின் நிதியுதவியால் அழைத்துச் செல்லப்படுவார்கள். மற்ற மூவரும் சொந்த செலவிலேயே செல்ல வேண்டும். ஆனால், ஜெர்மனி சென்று தங்கியிருந்து போட்டியில் பங்கேற்க நான்கரை லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால் அதற்கான பணத்தைத் தந்தை பிரிஜ்பால் சிங் திரட்ட முயன்றார். 

பணம் கிடைப்பதில் சிரமம் இருந்த நிலையில், ஆசையாக வளர்த்து வந்த மாட்டை 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்தார். அத்துடன், வட்டிக்கு கடன் கொடுப்பவர்களிடம் உதவி கேட்டார். ஆனால், சொந்தமாக நிலம், வீடு என எதுவும் இல்லாத அவருக்கு கடன் கொடுக்க யாரும் முன்வரவில்லை. ஆனாலும், முயற்சியைக் கைவிடாத பிரியா சிங்கும் அவர் தந்தையும் டெல்லிகுச் சென்று பிரதமர் அலுவலகத்தில் மனு அளித்தார்கள். அத்துடன், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரான ராஜ்யவர்தன் சிங் ரதோரைச் சந்திக்கவும் முயன்றனர். ஆனால் அதில் பலன் கிடைக்கவில்லை. 

அதனால் ஜெமனியில் சர்வதேசப் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோகுமோ என்கிற ஆதங்கத்துடன் பிரியா சிங் இருந்தார். இந்த நிலையில், அவரது நிலைமை குறித்து கேள்விப்பட்ட உத்தரப்பிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் உடனடியாக 4.5 லட்சம் ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டார். உதவி கிடைத்துவிட்டதால், ஜெர்மனியில் பதக்கம் வெல்லும் ஆவலுடன் பயணத்துக்குத் தயாராகி வருகிறார் பிரியா சிங்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!