வெளியிடப்பட்ட நேரம்: 18:04 (09/06/2018)

கடைசி தொடர்பு:18:18 (09/06/2018)

நெல்லையில் காட்டாற்று வெள்ளம்: கோயிலில் சிக்கிய 100 பேர் பத்திரமாக மீட்பு!

நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக ஏர்வாடி அருகே நம்பி கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்கள். அவர்களைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டார்கள்.

நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக ஏர்வாடி அருகிலுள்ள நம்பி கோயிலுக்குச் சென்ற பக்தர்கள், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் சிக்கிக்கொண்டார்கள். அவர்களைட் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டார்கள். 

காட்டாற்று வெள்ளம்

நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பதால் மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்கிறது. வள்ளியூரை அடுத்த திருக்குறுங்குடி மலையில் நம்பி கோயில் உள்ளது. சுமார் 4 கி.மீ தூரத்துக்கு மலைப் பகுதிகளைக் கடந்து இந்தக் கோயிலுக்குச் செல்ல வேண்டும். இந்த வழியில் இரு இடங்களில் ஆற்றுப் பாலம் உள்ளது. இன்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குச் சென்றார்கள்.  

இந்தநிலையில், நேற்று இரவு முதலாகவே மழை பெய்து வரும் நிலையில், நம்பி கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள பறப்பாற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மலையில் உள்ள காட்டாறுகளிலிருந்து பெருக்கெடுத்து ஓடிவந்த தண்ணீர் இந்த ஆற்றில் கலந்ததால், திடீரென ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்தது. நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் கோயிலுக்குச் சென்ற பக்தர்களால் கீழே இறங்கி வர முடியாத நிலைமை ஏற்பட்டது. 

அதனால், ஏர்வாடி தீயணைப்புத் துறையினர் அந்தப் பகுதிக்குச் சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கப் போராடினார்கள். முதலில்
10 பேர் மீட்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் நீரின் வேகம் அதிகரித்தது. அதனால் மீட்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது. அதையடுத்து வள்ளியூரிலிருந்து கூடுதலாகத் தீயணைப்பு வாகனம் சென்று உதவி செய்தது. அதனால் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் கோயிலில் சிக்கிய 100-க்கும் அதிகமான பக்தர்கள் தீயணைப்புத் துறையினரின் முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டார்கள்.