வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (09/06/2018)

கடைசி தொடர்பு:20:20 (09/06/2018)

`பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த 2 பேர் கைது!’ - கொந்தளிப்பில் சேலம் மக்கள்

சேலம்

சேலம் டூ சென்னை 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை சேலம் அம்மாப்பேட்டை போலீஸார் விசாரணை என்ற பெயரில் இன்று விடியற்காலை வீடு புகுந்து தூக்கிவந்து 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

இதனால், 8 வழிச் சாலைக்கு எதிப்பு தெரிவித்து வரும் மக்கள் கொந்தளித்துப்போய் காவல் நிலையத்தை முற்றுகையிட்டார்கள். இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சாலையும் 10,000 கோடியில் போடப்படும் 8 வழி பசுமைச் சாலைக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் கொட்டாயூர் தி.மு.க கிளைச் செயலாளர் முத்துகுமார், சூரியக்கவுண்டன் காட்டை சேர்ந்த மாரியப்பன் மீது 7 (1) சி.எல்.ஏ., 151 சி.ஆர்.பி.சி.,(8) ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

சேலம்இதுகுறித்து குப்பனூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கூறுகையில், ''சேலத்தில் இருந்து சென்னை செல்லுவதற்கு வழி இல்லை என்றால் எங்கள் நிலங்களை கொடுக்க தயார். ஆனால் சேலம் டூ சென்னைக்கு தரை மார்க்கமாகவே மூன்று வழிகள் இருக்கின்றன. இந்த 8 வழி சாலை என்பது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அல்ல, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது. அதனால் சேலத்தில் ஆரம்பித்து காஞ்சிபுரம் வரை இந்த 8 வழி சாலையால் பாதிக்கப்படும் மக்கள் போராடி வருகிறோம்.

எங்களை யாரும் தூண்டி விடவில்லை. ஊருக்கு 10 பேர் படித்திருக்கிறோம். எங்களுக்கு எல்லா தகவல்களும் தெரியும். எங்களுக்காக சிலர் ஆதரவு தந்து போராடுகிறார்கள். அவர்களை நக்சலைட் என்றும் தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்துகிறார்கள். இயற்கையை நேசிப்பவர்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். எங்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கும், எங்களுக்கு யாரும் ஆதரவு கொடுக்க கூடாது என்றும் கைது செய்து அச்சுறுத்துகிறார்கள்'' என்றார்.

குப்பனூரை சேர்ந்த நாராயணன், ''எங்க ஊரை சேர்ந்த முத்துகுமார், ராஜா, ரவிச்சந்திரன், பழனியப்பன், கந்தசாமி என்பவர்களையும் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களையும் சுமார் 10 பேரை அதிகாலையிலேயே அம்மாப்பேட்டை காவல் நிலையத்திற்கு பிடிச்சுட்டு வந்துட்டாங்க. நாங்க எல்லோரும் படித்தவர்கள் மக்களுக்கான உரிமைகளை எம் மக்களிடம் சொல்லுகிறோம். நாங்கள் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் அல்ல. எங்களுக்கு பின்புலமும் இல்லை. பாதிக்கப்பட்டிருக்கிறோம். இறுதி வரை போராடுவோம்'' என்றார். இதுப்பற்றி அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பால்பாண்டியிடம் கேட்டதற்கு, ''நான் அரெஸ்ட் செய்யவில்லை. அது வேறு செக்‌ஷன், நான் வேறு செக்‌ஷன். அதனால் அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க