`ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டால் நல்லது! - பா.ஜ.க. மாநிலச் செயலாளர் ஸ்ரீநிவாசன் பேச்சு

" ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்  என, தமிழக அரசு உத்தரவதமாக சொல்லி உள்ளது. அதனை நிரந்தரமாக மூடிவிட்டால் நல்லது" என பா.ஜ.க.வின் மாநிலச் செயலாளர் ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க மாநிலச் செயலாளர் ஸ்ரீநிவாசன்

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், பா.ஜ.க.,வின், அறிவுசார் பிரிவின் சார்பாக மத்திய அரசின், 4 ஆண்டு சாதனைகள் குறித்த  கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில், பா.ஜ.க.வின் மாநிலச் செயலர் ஸ்ரீநிவாசன், சிறப்பு அழைப்பாளராக  கலந்து கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். வழக்கம்போல இதனை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற  அறிவுஜீவிகள் மற்றும் சில ஊடகங்கள் சர்ச்சைக்குரிய விஷயமாக மாற்றியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் எவ்வாறு பணியாற்றுகிறது, எப்படி தேசபக்தியுடன் செயல்படுகிறது என மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வாய்ப்பாக இதனை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்-ஸும் எடுத்துக் கொள்கிறது. இதுபோன்ற விவாதங்கள் தொடர வேண்டும். அது பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு உதவும். பிரணாப் முகர்ஜிக்கு தமிழக பா.ஜ.க.வின் சார்பில் பாராட்டுக்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு பின், இப்போது மக்கள் மனதில் ஏற்பட்டு இருந்த காயம் மெல்ல மெல்ல ஆறத் துவக்கியுள்ளது. அதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்  என தமிழக அரசு உத்தரவதமாக சொல்லி உள்ளது. அதனை நிரந்தரமாக மூடிவிட்டால் நல்லது. தூத்துக்குடியில் முழுமையான அமைதி திரும்பிட விரும்பாத சில சக்திகள், சமூக ஊடகங்களில், மீம்ஸ் என்ற பெயரில், சில காட்சிகளை பரப்பி வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சும் வேலையைச் செய்து வருகின்றனர். இது, இன்னொரு கலவரச் சூழலை ஏற்படுத்தும் முயற்சியோ என்ற அச்சத்தை தருகிறது. 

உண்மையில்லாத செய்திகள் பரப்புபவர்களை அரசு கவனத்தில் கொண்டு, அதனை கண்காணிக்க வேண்டும். தமிழகத்தினை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. மத்திய அரசு, தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை வழங்கி வருகிறது. மாநில அரசு மத்திய அரசுவுடன் இணைந்து செயல்பட வேண்டும். எந்த ஒரு திட்டத்தையும் வேண்டாம் என்கிற எதிர்மறை சூழல்தான் தமிழகத்தில் உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். தமிழக அரசியல், வளர்ச்சித் திட்டங்களுக்கான எதிரான அரசியல், எதிர்மறையான அரசியலாகப் போய் கொண்டு இருப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!