வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (09/06/2018)

கடைசி தொடர்பு:19:30 (09/06/2018)

``இன்னும் 3 வருஷத்துக்கு 5 ரூபாய்தான்!'' - ஈரோட்டில் களைகட்டும் கரும்பு ஜூஸ் வியாபாரம்

``இன்னும் 3 வருஷத்துக்கு 5 ரூபாய்தான்!'' - ஈரோட்டில் களைகட்டும் கரும்பு ஜூஸ் வியாபாரம்

கோடைக்காலக் கத்திரி சீஸன் முடிந்தாலும் வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. `போதும்... இதுக்கு மேல தாங்க மாட்டான் இந்தக் கைப்புள்ள...’ என வடிவேலு ரேஞ்சுக்கு நாம் கெஞ்சினாலும், `வாட்டி வதைக்காமல் விட மாட்டேன்!’ என்றரீதியில் சூரியன் சுட்டெரிக்கிறது. `தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கும்' என்ற செய்தி நம்மைக் குளிர்வித்தாலும், பல்லை இளித்துக்கொண்டு பட்டையைக் கிளப்பும் வெயிலைப் பார்க்கையில் பயமாய் இருக்கிறது. ஏ.சி., ஏர்கூலர், ஜில்லென்ற ஜூஸ், குளிர்ப்பிரதேசங்களுக்கு டூர் என, வெயிலைச் சமாளிக்க மேல்தட்டு வர்க்கம் காசை தண்ணியாகச் செலவுசெய்கின்றது. 

ஜூஸ்

நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு வர்க்கத்தினரோ, `வெயிலைச் சமாளிக்க ஒரு ஜூஸ் குடிக்கலாம்!' என கடைக்குச் சென்றால், அதன் விலை நம்மை மேலும் கிறுகிறுக்கவைக்கிறது. அப்படியிருக்க ஈரோட்டில் `ஒரு டம்ளர் கரும்பு ஜூஸ் வெறும் 5 ரூபாய்க்கு’ என விற்க, கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழகத்தின் பல இடங்களிலும் 10 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை, ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் விற்பனை செய்யப்படுகிறது. ஈரோட்டில் மட்டும் வெறும் 5 ரூபாய்க்கு பல இடங்களில் கரும்பு ஜூஸ் வியாபாரம் கனஜோராக நடந்துவருகிறது. கரும்புச் சாறுடன் இஞ்சி, எலுமிச்சை மற்றும் புதினா போன்றவற்றைக் கலந்து ஒரு டம்ளரில் ஜில்லென ஊற்றித் தருகிறார்கள். எந்தவிதமான கலப்படமும் இல்லாமல் நம்முடைய கண் எதிரிலேயே கரும்பைப் பிழிந்து ஃப்ரெஷ்ஷாகத் தருகிறார்கள். சுவை மற்றும் எசன்ஸ் என எதையும் இத்துடன் சேர்க்காததால், மக்கள் இதை விரும்பி அருந்துகின்றனர்.

ஜூஸ்

ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் வெறும் 5 ரூபாய்தான் என்பதால், சாதாரண மக்களும்  2 முதல் 3 கிளாஸ் வரை ரவுண்டு கட்டி அருந்துகின்றனர். வெயில் நேரத்தில் கரும்பு ஜூஸ் குடிக்கும்போது இன்ஸ்டன்ட் எனர்ஜி கிடைப்பதாக ஒருசிலர் கூறுகின்றனர். சாப்பிட மட்டுமல்லாமல் பார்சலும் தருகிறார்கள். ஒருசில கடைகளில் ஒரு லிட்டர் கரும்பு ஜூஸ் 30 ரூபாய்க்குத் தருகின்றனர். பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களோடு ஒப்பிடுகையில் இதன் விலை மிகவும் குறைவு. இதனால், கரும்பு ஜூஸுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

ஈரோட்டில் திரும்பும் இடங்களிலெல்லாம் கரும்பு ஜுஸ் கடைகளாகவே இருப்பதால், விற்பனையாளர்களிடம் போட்டியும் பலமாக இருக்கிறது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவிலிருந்து மணிக்கூண்டுக்குச் செல்லும் சாலையில் உள்ள ஒரு கரும்பு ஜூஸ் கடை, போட்டியின் காரணமாக விலையை 5 ரூபாயிலிருந்து 4 ரூபாயாகக் குறைத்திருக்கிறது. அதேபோல, வீரப்பன் சத்திரம் பகுதியில் இருக்கும் ஒரு கரும்பு ஜுஸ் கடை, திறப்பு விழாவை முன்னிட்டு முதல் மூன்று நாள்களுக்கு `ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸின் விலை வெறும் 2.50' என அறிவித்திருந்தது.     

ஜூஸ்

``இப்படி குறைவான விலைக்கு கரும்பு ஜூஸ் விற்பது எப்படிச் சாத்தியமாகிறது?'' என, வீரப்பன்சத்திரம் பகுதியில் கரும்பு ஜூஸ் கடை வைத்திருக்கும் சதாசிவம் என்பவரிடம் பேசினோம்.

``ஈரோட்டுலயே ஒருசிலர் 20 ரூபாய்க்கெல்லாம் கரும்பு ஜூஸ் விக்குறாங்க. எல்லாரும் ஒரே இடத்துல ஒரே விலைக்குத்தான் கரும்பு வாங்குறோம். வயலுக்குப் போய் விவசாயிகிட்ட இருந்து நேரடியா கரும்பு வாங்கினா, ஒரு கிலோ 3 ரூபாய்னு ஒரு டன் 3 ஆயிரம் ரூபாய்க்கு தருவாங்க. ஆனா, 10 டன்னுக்குக் குறைவா தர மாட்டாங்க. மொத்தமா 10 டன் வாங்கி வெச்சுக்கிற அளவுக்கு நம்மகிட்ட இடவசதி இல்லை. குண்டுவெல்லம் தயாரிப்பவர்கள், டன் கணக்குல வாங்கி வெச்சுப்பாங்க. அதனால அவங்ககிட்ட இருந்து எங்களுக்குத் தேவைப்படுற கரும்பை நாங்க வாங்கிக்குவோம். என்ன ஒண்ணு, அவங்ககிட்ட ஒரு கிலோ 6 ரூபாய். வயல்ல இருந்து நேரடியா வாங்கிறதோட டபுள் மடங்கு விலை. இருந்தாலும், தேவைப்படுறப்ப தினமும் கொஞ்ச கொஞ்சமா வாங்கிக்கலாம்.

ஜூஸ்

நாங்க குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 100 கிலோ கரும்பு வாங்கி ஜூஸ் எடுக்குறோம். அதுல 1,500 ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. ஒரு வேலை ஆள் கூலி, கரும்பு எடுத்துட்டு வர்ற செலவு, டீசல்னு எல்லாம் போக தினமும் குறைந்தபட்சம் 500 ரூபாய்க்குமேல கையில நிக்கும். ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் 5 ரூபாய்ன்னு விற்கிறப்பவே நியாயமான லாபம் கிடைக்குது. ஆனா, ஒருசிலர் கரும்பைச் சீவி சுத்தமா கொடுக்குறேன்கிற பேர்ல பல வகையில ஷோ காட்டுறாங்க. பொங்கல் கரும்பை நாம யாராவது கழுவிட்டு சாப்பிடுறோமா என்ன?... விலை அதிகமா வெச்சு விற்கிறதை நியாயப்படுத்துறதுக்கான உத்தி அதெல்லாம்.

வருங்காலத்துல நேரடியா வயல்லயே போய் கரும்பைக் கொள்முதல் செய்யலாம்னு இருக்கோம். அப்படி செஞ்சா இன்னும் 3 வருஷத்துக்கு கரும்பு ஜூஸ் விலை 5 ரூபாய்தான். வெயில் தாங்க முடியாம ஒரு கிளாஸ் ஜூஸ் குடிக்கலாம்னு கடைக்கு வர்றவங்களுக்கு உண்மையாவே மனசு குளுரணும் சார்” என்றார். 

ஜூஸ்

எதிலெல்லாம் எவ்வளவு லாபம் பார்க்கலாம் என அங்கலாய்ப்பவர்களுக்கு மத்தியில், வாடிக்கையாளர்களுக்கு மனநிறைவு தரும் வகையில் நியாயமான விலையில் விற்கும் ஆள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!


டிரெண்டிங் @ விகடன்