`பா.ஜ.க-வின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் மோடியைக் கொல்ல சதி திட்டம்!’ - குற்றம்சாட்டும் பொன்.ராதாகிருஷ்ணன்

பா.ஜ.க.வின் வளர்ச்சியை பொறுக்காமல் மோடி யை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு.

பா.ஜ.கவின் வளர்ச்சியைப் பொறுக்காமல் பிரதமர் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டியிருக்கிறார்.

பிரதமர் மோடி யை கொல்ல சதிதிட்டம் உருவானது குறித்து பொன்னார் பேட்டி


ராமநாதபுரத்தில் நடைபெற்ற மத்திய அரசின் 4 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், ''பா.ஜ.க.வளர்ந்து விட்டால் நாட்டில் பிரிவினைவாதம்,பயங்கரவாதத்துக்கு இடமில்லாமல் போய் விடும் என்பதற்காகவே மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தியை தமிழகத்தில் கொலை செய்தது போல என்ற வாசகமும் மிரட்டல் கடிதத்தில் இருப்பதால், இதன் பின்னணியில் அந்நிய நாட்டு சதிகளும் இருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. தமிழகத்தில் தமிழ் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் பயங்கரவாதிகள் அதிகமாகி தமிழக இளைஞர்களை ஈர்க்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.இந்த பயங்கரவாதத்தை தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் வளர்ந்து விடக்கூடாது என்ற பின்னணியில் இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இதை எதிர்த்து தி.மு.கவோ மற்ற எதிர்க்கட்சிகளோ இதுவரை குரல் கொடுக்கவே இல்லை.

இதன் காரணமாகவே தமிழகத்தில் தொழிற்சாலைகளும்,தொழில் நிறுவனங்களும் வர மறுத்து வெளிமாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றன. பிரதமருக்கு வந்த மிரட்டல் நம் நாட்டுக்கு வந்த மிரட்டல். அவர் ஒரு கட்சிக்கு மட்டும் தலைவரில்லை. நம் நாட்டின் தலைவர். எந்த பயங்கரவாதியையும் தமிழக போலீஸ் கைது செய்ததாக சரித்திரம் இல்லை. பல பயங்கரவாதிகள் மத்திய உளவுப்பிரிவு மூலமாகவே கைது செய்யப்பட்டுள்ளனர். 

பிரதமர் மோடி வாக்குவங்கி அரசியல் செய்யாமல் எரிவாயு இணைப்புக்கு வசதியானவர்கள் பெறும் மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்று கூறியதால் ஒன்றேகால் கோடி மக்கள் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இந்தியாவில் 4.20 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மின்சாரம் இல்லாமல் இருந்த 18,452 கிராமங்களுக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டு ஒளிமயமான இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது. மின்சாரச் செலவைக் குறைக்க 3,14,64000 பேருக்கு எல்.இ.டி.பல்புகள் வழங்கப்பட்டுள்ளது.

சாலைப்போக்குவரத்தில் மிகப்பெரிய புரட்சி செய்திருப்பதுடன் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு குடும்பத்துக்கு மருத்துவச் சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் அனுமதியளிக்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் துவக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து பொறாமைப்படும் வகையில் மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளையும் சாதனைகள் நிகழ்த்திய அரசாக செயல்பட்டு வருகிறது’’ என்றார். முன்னதாக அவர் மோடிக்கு வந்த கொலை மிரட்டல் கடிதத்தின் நகலை செய்தியாளர்களிடம் காட்டி விளக்கம் அளித்தார்.அப்போது பா.ஜ.க.வின் மாவட்ட தலைவர் கே.முரளீதரன்,மாநிலத் துணைத்தலைவர்கள் து.குப்புராமு,சுப. நாகராஜன், கோட்டப்பொறுப்பாளர் சண்முகராஜ், மாவட்ட செயலாளர் ஆத்மகார்த்திக்,நகர் தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!