வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (09/06/2018)

கடைசி தொடர்பு:23:00 (09/06/2018)

`மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தை கலைப்பதா?’ - கடலூரில் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்த பகுதியில் உள்ள ஏழை எளிய பெண்கள் சுமார் 500 பேர் இந்த சங்கத்தின் வாயிலாக அரசு வழங்கும் இலவச சீருடையை தைத்துத்தரும் பணியை மேற்கொண்டு தங்களின் வாழவாதாரத்திற்கு வழி செய்து வந்தனர்

மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தினை மூடும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 500க்கும் மேற்பட்ட பெண்கள்கள் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டம்

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில்  1998 ஆம் ஆண்டு மகளிர் தையல் கூட்டுறவு சங்கம் துவங்கப்பட்டது.  இந்த பகுதியில் உள்ள ஏழை எளிய பெண்கள் சுமார் 500 பேர் இந்த சங்கத்தின் வாயிலாக அரசு வழங்கும் இலவச சீருடையை தைத்துத்தரும் பணியை மேற்கொண்டு தங்களின் வாழவாதாரத்திற்கு வழி செய்து வந்தனர். இந்த சங்கம் தனிசங்கமாக சமூகநலத்துறை அதிகாரிகளால் அங்கீகரிக்காமல் விழுப்புரம் மாவட்டத்தின் கிளை சங்கமாகவே செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது இந்த சங்கத்தை கலைத்துவிடுவது அல்லது விழுப்புரம் சங்கத்துடன் இணைப்பது என தமிழக அரசு  முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு அந்த சங்கத்தை நம்பி பிழைப்பு நடத்தி வந்த மகளிர் கடும் எதிர்ப்பு தெரிவித்து 
வருகின்றனர். கடலூரிலிருந்து வெகுதொலைவில் உள்ள விழுப்புரம் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு தையல் துணிகளை
 பெற்று வந்தும் தைத்துத் தருவது  இயலாத காரியம். இதனால் 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய பெண்களின் வாழ்வாதரம்
பாதிக்கப்படும். தமிழக  அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி இந்த சங்கத்தை கலைக்கும் முடிவை கைவிடவேண்டும் என வலியுறுத்தி சுமார் 500 பெண்கள் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் தமிழக அரசைக் கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்