வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (09/06/2018)

கடைசி தொடர்பு:22:30 (09/06/2018)

‘பிரம்மாண்ட மாநாடு; தேசியத் தலைவர்களுக்கு அழைப்பு’ - மாஸ் காட்டத் தயாராகும் வைகோ

வைகோ

கடந்த 1994ம் ஆண்டு மே 6-ம் தேதி உதயமான ம.தி.மு.க, வெற்றிகரமாக 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து வெள்ளி விழா காணவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அண்ணா மற்றும் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க சார்பில் மாநாடு நடத்திவரும் வைகோ, இந்த ஆண்டு அத்துடன் கட்சியின் வெள்ளி விழாவையும் சேர்த்து மிகப் பிரம்மாண்டமான மாநாடாக நடந்த முடிவு செய்திருக்கிறார்.

இந்த மாநாடு செப்டம்பர் 15-ம் தேதி ஈரோட்டில் நடைபெறவிருக்கிறது. மாநாட்டிற்கான இடத்தினை தேர்வு செய்வதற்காக கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஈரோட்டிற்கு வந்த வைகோ, ஈரோட்டை அடுத்த சித்தோடு, ஈரோடு - கரூர் சாலை என பல இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டிருக்கிறார். இறுதியில் ஈரோடு - பெருந்துறை சாலையில் மூலக்கரை என்னுமிடத்தில் மாநாடு நடத்த வைகோ ஓ.கே சொல்லியிருக்கிறார். இந்த இடத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு பந்தலை அமைக்கவிருக்கின்றனர்.

வைகோ

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், ஈரோட்டில் ம.தி.மு.க பொதுக்குழுவை வைகோ நடத்தினார். அப்படியிருக்க, கட்சியின் வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெறும் மிகப் பிரம்மாண்டமான மாநாட்டையும் ஈரோட்டிலேயே வைகோ நடத்த முடிவு செய்திருப்பது ஏன்?... மாநாட்டிற்கு யார் யாருக்கெல்லாம் அழைப்பு?... என்பது குறித்து விவரமறிந்த ம.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். “இந்துத்துவா சக்திகளை எதிர்ப்பது என்ற கொள்கையை தீவிரமாக இந்த மாநாட்டில் முன்வைக்க இருக்கிறார் வைகோ. அதற்கான ஆரம்பத்தை பெரியார் மண்ணான ஈரோட்டில் இருந்து முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே ஈரோட்டில் இந்த மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மாயாவதி, மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ் போன்ற பா.ஜ.கவுக்கு எதிரான மனநிலையில் உள்ள அனைத்து தேசியத் தலைவர்களையும் வைகோ அழைத்து மேடையில் ஏற்றவிருக்கிறார். கடந்த 2000-ம் ஆண்டு அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், வி.பி.சிங் ஆகியோரை அழைத்து ஈரோட்டில் மிகப் பிரம்மாண்டமான மாநாட்டினை நடத்தியவர் வைகோ. அதேபோல, இந்தமுறையும் பல தேசியத் தலைவர்கள் ம.தி.மு.க மாநாட்டில் நிச்சயம் கலந்து கொள்வார்கள். அதற்கான வேலைகள் விரைவில் ஆரம்பமாகவிருக்கின்றன” என்றார்.

கடந்த மார்ச் மாதம் ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற தி.மு.க மண்டல மாநாட்டிற்கு, தி.மு.க பிரதிநிதிகளைத் தாண்டி கூட்டணிக் கட்சிகள் யாருக்குமே அழைப்பு விடுக்கவில்லை. அசாதாரணமான அரசியல் சூழல் நிலவி வரும் வேளையில், அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தேசிய அளவிலான தலைவர்களை மேடையேற்றி ஸ்டாலின் தன்னுடைய பலத்தை காட்டியிருக்க வேண்டும் என பலரும் அப்போதே விமர்சனம் செய்தனர். அப்படியிருக்க, தற்போது அதே ஈரோட்டில் மாநாடு நடத்தும் வைகோ, ஸ்டாலின் முன்னிலையிலேயே தேசிய அளவிலான தலைவர்களை மேடையில் அமர்த்தி மாஸ் காட்டப் போகிறார்.