வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (10/06/2018)

கடைசி தொடர்பு:00:00 (10/06/2018)

ராமேஸ்வரம் துறைமுகத்தில் விசைப்படகுகள் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு!

 மீன்பிடி தடைக்காலம் முடிந்து பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடலோர பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல உள்ள நிலையில் மீனவர்களது படகுகளை ஆய்வு செய்யும் பணி நடந்தது.

 மீன்பிடி தடைக்காலம் முடிந்து பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடலோர பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல உள்ள நிலையில் மீனவர்களது படகுகளை ஆய்வு செய்யும் பணி நடந்தது.

ராமேஸ்வரத்தில் படகுகளை ஆய்வு செய்யும் பணி நடந்தது

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக தமிழக கடலோர பகுதியான பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடலோர பகுதியான திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு துவங்கி கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி வரையில் ஆண்டு தோறும் 61 நாள்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இந்த தடை கடந்த ஏப்ரல் 14-ம் தேதி நள்ளிரவு தொடங்கி வரும் 15-ம் தேதி நள்ளிரவுடன் முடிகிறது. 

இந்த தடைக் காலத்தில் இப்பகுதியில் உள்ள மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்த்து, புதிய வர்ணம் தீட்டி புதிய வலைகளுடன் மீன்பிடிக்க தயாராகி வருவார்கள். இந்நிலையில் தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க செல்ல தயாராக உள்ள படகுகள் அரசு விதிகளின் படி உரிமம் பெற்றுள்ளதா என்பது குறித்தும், அரசால் அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மீன்பிடி படகுகள் உள்ளனவா, மீன்பிடிக்க கூடிய வகையில் தரத்துடன் உள்ளதா என்பது குறித்து மீன் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம்  பகுதிகளில் உள்ள மீன்பிடி விசைப்படகுகளை சென்னை  மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மீன் துறை அதிகாரிகளுடன் இணைந்து ராமேஸ்வரம் மீன் துறை உதவி இயக்குநர் மணிகண்டன் தலைமையில் 54 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது அரசு விதிகளை மீறும் வகையில் உள்ள அளவு மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவினை விட கூடுதல் குதிரை திறன் கொண்ட எஞ்சின்கள் பொருத்திய படகுகளை படம் எடுத்து ஆய்வு செய்ய மீன் துறை  அதிகாரிகள் முயன்றபோது, அதற்கு சில மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆய்வு பணியில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மீனவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆய்வு பணிகள் தொடர்ந்தன.