வெளியிடப்பட்ட நேரம்: 02:45 (10/06/2018)

கடைசி தொடர்பு:02:45 (10/06/2018)

`கேரளத்தில் அரசுப் பள்ளிகளை பாதுகாக்க நடவடிக்கை' - பினராயி விஜயனுக்கு பாராட்டு தெரிவித்த ஜி.ராமகிருஷ்ணன்!

தமிழகத்தில் அரசு பள்ளிகளை மூடும் நிலையில் கேரளா மாநிலத்தில் பினராயிவிஜயன் தலைமையிலான அரசு பள்ளிகளை பாதுகாக்க கூடிய மகத்தான நடவடிக்கையை எடுத்து வருகிறது என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மிழகத்தில் அரசு பள்ளிகளை மூடும் நிலையில் கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பள்ளிகளை பாதுகாக்க கூடிய மகத்தான நடவடிக்கையை எடுத்து வருகிறது என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜி ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 'போராடுவோம் தமிழகமே' என்ற கோஷத்துடன் மக்கள் கோரிக்கை பிரச்சார இயக்கம் ஜூன் 8-ம் தேதி முதல் தமிழகத்தின் 6 முனைகளிலிருந்து துவங்கி  ஜூன் 14-ம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது. இந்த பிரச்சார பயணத்தின் ஒரு பகுதி குமரி  மாவட்டம் கொல்லங்கோட்டில் நடந்தது. இதில் சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசுகையில், "மக்கள் நலனை  பாதுகாப்பதற்காக என்றென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக போராடி வருகிறது. மத்திய அரசும், மாநில அரசும் நம்மை அடிக்கிறது. மோடி பிரதமரானால் இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவேன் என பேசினார். ஆனால் இந்த 4 ஆண்டு காலத்தில் நாடு முழுவதும் 36 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஜி.எஸ்.டி வரியால் தமிழகத்தில் 50 ஆயிரம் சிறிய தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. கடந்த ஜூலை மாதத்திலிருந்து 5 லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள்.

உற்பத்தி பொருட்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிப்பால் கச்சா பொருட்கள் விலை உயர்ந்திருக்கிறது. திருப்பூர் நகரம் 26 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலவாணி ஈட்டித்தந்தது. ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு பின்னர் 3,000 கோடி ரூபாய் அந்நிய செலாவணி சரிந்துள்ளது. திருப்பூரில் 40 சதவீதம் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக தான் கடந்த 4 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 11 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடன் கொடுத்ததால் அரசு உடைமையாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய 13 பேரை  எல்லையில் எதிரிகளை போல  சுட்டுக்கொன்றனர். 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு நியாயம் வழங்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு கிட்டத்தட்ட 800 அரசுப் பள்ளிகளை கணக்கெடுத்து மூடப்போவதாக அறிவித்து பட்டியல் வைத்திருக்கிறது. நம் அருகிலுள்ள கேரள மாநிலத்தில் அரசு பள்ளிகளை பாதுகாக்க கூடிய மகத்தான நடவடிக்கையை பினராயி விஜயன் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. கேரள மாநில அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. நாங்கள் இந்த பிரச்சார இயக்கத்தின்போது மத்திய, மாநில அரசுகளை விமர்சிப்பது மட்டுமல்ல, மக்களுக்காக ஒரு மாற்று கொள்கையை முன்வைத்து ஒருமகத்தான இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்" என்றார்.