வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (10/06/2018)

கடைசி தொடர்பு:07:15 (10/06/2018)

`அஷ்வின், ஜடேஜாவை விட ரஷித் கான், முஜீப் பெஸ்ட்' - ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஆருடம்!

இந்தியாவைக் காட்டிலும் தங்களிடமே சிறந்த ஸ்பின்னர்கள் உள்ளனர் என ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் அஷ்கர் ஸ்டானிக்சய் கூறியுள்ளார். 

ஆஃப்கானிஸ்தான் கேப்டன்  அஷ்கர் ஸ்டானிக்சய்

ஆஃப்கானிஸ்தான் அணி டெஸ்ட் அந்தஸ்து பெற்றதையடுத்து, அந்த அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்த்துக் களமிறங்க உள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் போட்டி, வரும் ஜூன் 14-ம் தேதி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. காயம் காரணமாக கோலி விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக அஜிங்கியா ரஹானே தலைமையில், இந்திய அணி பங்கேற்க உள்ளது. இதற்கிடையே, இந்த டெஸ்ட்டில் விளையாட உள்ள ஆஃப்கானிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அஷ்கர் ஸ்டானிக்சய்  தலைமையில் அந்த அணி களமிறங்க உள்ளது. இதில் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், அமீர் ஹம்சா மற்றும் ஜாகிர் கான் ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். 

இதற்கிடையே, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் குறித்து ஆஃப்கன் கேப்டன் அஷ்கர் ஸ்டானிக்சய் பேசியுள்ளார். அதில்,  ``இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்காகக் கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். இந்தியாவை எதிர்கொள்ள மன உறுதி அதிகமாக உள்ளது. கடந்த சில வருடங்களாக நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். பேட்ஸ்மேன்களும், பௌலர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஆஃப்கானிஸ்தானில் சிறந்த விஷயம் என்னவென்றால் நிறைய திறமையான இளம் வீரர்கள் ஸ்பின்னர்களாக வருகிறார்கள். காரணம் அவர்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் போன்றோரை பின்பற்றுகிறார்கள். எங்களின் ஸ்பின் டிபார்ட்மென்ட் மிகவும் பலமாக உள்ளது. என்னைக் கேட்டால் இந்திய ஸ்பின்னர்களை விட எங்களிடம் சிறந்த ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்" என்றார். 

ரஷித் கான்

இதே கருத்தை வழிமொழிந்து பேசிய ஆஃப்கன் கீப்பர் மொகமத் ஷஜாத்,  ``இந்த டெஸ்ட் நிச்சயம் ஈசியாக இருக்காது. இந்தியாவிலும் சிறந்த ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். அதேபோல் எங்கள் அணியிலும் உள்ளனர். அனைவருக்கும் தெரியும் உலகின் நம்பர் ஒன் ஸ்பின்னர் ரஷித் தான் என்று. அவரைப் போல் முஜீப், ஜாகிர் ஆகியோரும் சிறந்த பௌலர்களே. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கண்டிப்பாக அதிர்ச்சி நடக்கும். எங்கள் ஸ்பின்னர்கள் அதனைச் செய்வார்கள்" என்றார். 

முன்னதாக இந்த ஆட்டத்துக்காக இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திர அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய மூன்று ஸ்பின் பௌலர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் 4 மற்றும் 5ம் இடத்தில் உள்ள ஜடேஜா, அஷ்வின் உள்ளனர். இவர்களை விட ரஷித் கான், முஜீப் சிறந்தவர்கள் என ஆஃப்கன் வீரர்கள் பேசியுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க