`மாணவனுக்கு அதிர்ச்சி அளித்த யோகி ஆதித்யநாத்' - காசோலையால் எழுந்த சர்ச்சை!

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிசாக அளித்த காசோலை வங்கியில் திருப்பி அனுப்பட்டதால் மாணவர் அதிர்ச்சியடைந்துள்ளார். 

யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.5 சதவிகித மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 7 வது இடம் பிடித்தவர் அலோக் மிஸ்ரா. இவரைப் பாராட்டும் விதமாக மாநில அரசு சார்பில் கடந்த 29ம் தேதி நடந்த விழாவில் மிஸ்ராவுக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை பரிசாக அளித்தார். இதனையடுத்து அந்தக் காசோலையை வங்கியில் பணமாக மாற்றச்சென்றுள்ளார் மிஸ்ரா. ஆனால் நாட்கள் கழிந்தும் அவரது கணக்கில் பணம் ஏறவில்லை. விசாரித்ததில் காசோலை திருப்பி அனுப்பட்டது தெரியவந்தது. காசோலையில் உள்ள கையெழுத்து பொருந்தத்தால் திருப்பி அனுப்பப்பட்டதாக வங்கி தரப்பு விளக்கம் அளித்ததுடன், இதனை அளித்ததற்காக மாணவரிடம் அபராதமும் வசூலித்துள்ளனர். 

இந்த விவகாரம் வெளியே தெரிந்து சர்ச்சையை ஏற்படுத்த, உடனே சுதாரித்து கொண்ட உத்தர பிரதேச பள்ளிக்கல்வித்துறை மாணவரை அழைத்துத் திருப்பி அனுப்பப்பட்ட காசோலைக்கு வேறு காசோலையை வழங்கி பிரச்னையை சரி செய்தது. எனினும் முதல்வர் அளித்த காசோலையை திருப்பி அனுப்பப்பட்டது உத்தர பிரதேசத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கூறிய மாணவன் அலோக் மிஸ்ரா,  ``நான் முதல்வர் கையால் காசோலை பெற்றதில் மகிழ்ச்சியாக இருந்தேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு வங்கியில் அதனைக் கொடுத்து மாற்ற முயலும் போது தான் தெரிந்தது காசோலை திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் நான் சற்று ஏமாற்றம் அடைந்தேன்" எனத் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!