கடிதம் எதிரொலி - வீராங்கனைக்கு நிதி ஒதுக்கி மாநில அரசு அறிவிப்பு!

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க நிதி உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய வீராங்கனை ப்ரியாவுக்கு உதவ மாநில அரசு முன்வந்துள்ளது.

வீராங்கனை

சர்வதேசத் துப்பாக்கிச்சுடுதல் கூட்டமைப்பு சார்பில் வரும் ஜூன் 22-ம் தேதி ஜெர்மனியில் உள்ள சுஹல் நகரில் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்பூரைச் சேர்ந்த ப்ரியா சிங் என்ற 19 வயது மாணவி தேர்வாகியுள்ளார். இவர் 50 மீட்டர் துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்துகொள்ள உள்ளார். ஆனால், இவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் வெளிநாடு செல்ல முடியாத நிலையில் உள்ளார். எனவே, ``தனக்கு நிதி உதவி செய்யுமாறு உத்தரப்பிரதேச முதல்வர் மற்றும் நாட்டின் பிரதமர் ஆகிய இருவருக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன். மேலும், நான் விளையாட்டுத்துறை அமைச்சரைச் சந்திக்க இரண்டு முறை சென்றேன். ஆனால், அந்த இரண்டு முறையும் அவரைப் பார்க்க முடியவில்லை'' என மாணவி ப்ரியா தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து செய்திகள் வெளியானதும் மாணவிக்கு, உ.பி அரசு சார்பில் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும் அவரது பயணத்துக்கான செலவில் ஒரு பகுதியினை மாவட்ட நிர்வாகம் செய்துதரும் எனவும் யோகி கூறியுள்ளார். யோகியின் இந்த அறிவிப்புக்கு ப்ரியாவின் குடும்பத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கூறியுள்ள ப்ரியா, ``அரசு எனக்கு நிதி உதவி செய்ய முன்வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டுக்கு கௌரவம் தேடி தருவது எனது கடமையாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!