மதுரையில் பாண்டியர் கால சிலைகள் கண்டெடுப்பு; சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை!

பாண்டியர் காலத்து கடவுள் சிலைகள் மதுரை அருகே  கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்தச் சிலை பற்றி விசாரித்து வருகின்றனர்.

சிலைகள் கண்டெடுப்பு

மதுரை  அவனியாபுரத்திலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. நல்ல தங்காள் ஊருணி அருகே இக்கோயிலுக்குச் சொந்தமான கல் மண்டபம் நீண்ட காலமாக பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து கிடந்தது. உள்ளே முட்புதர்கள் வளர்ந்து காடு போல் காட்சி அளித்தது. இந்தக் கல் மண்டபத்தை புனரமைக்கும் நோக்கில் கோயில் அதிகாரிகள் பொதுமக்களுடன் இணைந்து நேற்று சுத்தப்படுத்த தொடங்கினார்கள். அப்போது, முருகன் சிலை, தலையில்லாத  நந்தி சிலை, ஐந்து முகம் கொண்ட சந்திரமவுலி சிலைகளைக் கண்டெடுத்தனர். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பாழடைந்த மண்டபத்தில் பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்ட தகவல், மதுரை சிலை கடத்தல்  தடுப்பு பிரிவுக்குத் தெரிவிக்கப்பட்டதால், சிலை கடத்தல் தடுப்பு  அதிகாரிகள் போதுமணி, பாண்டியராஜன் ஆகியோர்  சம்பவ இடத்துக்கு வந்து சிலைகளை ஆய்வு செய்தனர். இது பாண்டிய மன்னர்கள் காலத்து சிலைகள் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், அச்சிலைகளைக் கல்யாண சுந்தரேசுவரர் கோயிலில் மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். மேலும், இச்சிலைகள் ஆரம்பத்திலிருந்து இங்கே இருந்தவையா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!