மன்னார்குடியில் புதிய கட்சி தொடங்கினார் திவாகரன்!

தினகரனுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அம்மா அணி என்கிற பெயரில் செயல்பட்டு வந்த திவாகரன், அம்மா அணியை ”அண்ணா திராவிடர் கழகம்” எனத் தனி கட்சியாக அறிவித்து, அதற்கான கொடியையும் அறிமுகம் செய்தார்.

திவாகரன்

தினகரனுக்கும் சசிகலா சகோதரர் திவாகரனுக்கும் ஏற்பட்ட மோதலைத்  தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் மன்னார்குடியில் அம்மா அணி செயல்படுவதாக கூறி அதற்கான அலுவலகத்தை சசிகலா படத்துடன் திறந்தார். இதனையடுத்து தன் பெயரையோ படத்தையோ மேலும் என்னை உடன் பிறந்த சகோதரி என்றும் அழைக்கக் கூடாது என்றும் தனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார் சசிகலா. அதன் பிறகு அம்மா அணி அலுவலகத்தில் இருந்த சசிகலா படம் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மன்னார்குடியில் அம்மா அணி இனிமேல் ”அண்ணா திராவிடர் கழகம்” என்ற பெயரில் தனிக்கட்சியாக செயல்படும் என அறிவித்ததோடு அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தி கொடியை ஏற்றி வைத்தார். பிறகு, "இதே நேரத்தில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கட்சி கொடியை எங்கள் நிர்வாகிகள் ஏற்றியுள்ளனர்" எனக் கூறி மாநில அளவில் நிர்வாகிகள் பட்டியலையும் அறிவித்தார்.

திவாகரன்

பின்னர், ”கொடியில் உள்ள நிறமான சிகப்பு மனிதனின் ரத்தத்தால் அனைவரும் சமம் எனக் குறிப்பதோடு மனிதனின் வலிமையைக் குறிக்கிறது. வெள்ளை சமாதானம் மற்றும் அறிவைக் குறிக்கிறது. கொடியின் நடுவே உள்ள ஸ்டார், துருவநட்சத்திரம் போல் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் நினைவில் வரும் திராவிட தலைவர்களைக் குறிப்பதாகும். எங்கள் கட்சியில் திருநங்கைகளுக்கென தனி அமைப்பு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு மாநிலம் முழுவதும் பொறுப்புகள் கொடுக்கப்படும் இது அகில இந்திய அளவில் எந்தக் கட்சியிலும் இல்லாத ஒன்று. மேலும் சுற்று சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவோம்” எனத் திவாகரன் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!