வெளியிடப்பட்ட நேரம்: 14:01 (10/06/2018)

கடைசி தொடர்பு:14:01 (10/06/2018)

குற்றாலம் அருவியில் வெள்ளம் குறைந்ததால் 2 நாளுக்குப் பின் குளிக்க அனுமதி!

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் கடந்த இரு தினங்களாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று நிலைமை சீரடைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். விடுமுறை தினம் என்பதால் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர்.

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் கடந்த இரு தினங்களாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று நிலைமை சீரடைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். விடுமுறை தினம் என்பதால் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர்.

குற்றாலம் மெயின் அருவி

தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதனால் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் வெள்ளம் அதிகமாக இருந்ததால் கடந்த இரு தினங்களாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. காவல்துறையினரும் வனத்துறையினரும் அருவிக்குச் செல்லும் வழியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை முதலாகவே மழை பெய்யாமல் சாரல் மட்டுமே பெய்து வருகிறது. மேகமூட்டத்துடன் தென்றல் காற்று வீசுகிறது. குற்றாலத்தில் இதமான சூழல் நிலவும் நிலையில், அருவிகளில் ஏற்பட்டு இருந்த வெள்ளம் வடிந்து குளிப்பதற்கு உகந்த நிலை ஏற்பட்டது. அதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் இரு தினங்களுக்குப் பின்னர் இன்று சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். 

மெயின் அருவியின் ஒரு பகுதியில் மட்டுமே குளிக்க முடிந்த நிலையில், பெண்கள் குளிக்கும் பகுதியில் அதிக தண்ணீர் விழுவதால், பாதுகாப்பு கருதி அந்தப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை போலீஸார் அனுமதிக்கவில்லை.அதனால் ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் கூட்டம் அலைமோதியது. புலியருவியிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் குற்றாலத்துக்கு வருகை தந்துள்ளதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.