வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (10/06/2018)

கடைசி தொடர்பு:17:00 (10/06/2018)

ஓரங்கட்டப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்; ஜி -7 உச்சி மாநாட்டில் பரபரப்பு!

ஜி -7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிற கூட்டமைப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ட்ரம்ப் தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கும் தள்ளப்பட்டார். 

ட்ரம்ப் ஜி -7

கனடாவில் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமால்பே நகரில் கடந்த இரண்டு நாள் ஜி -7 உச்சி மாநாடு நடந்தது. இதில், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாடு தொடங்கும்முன்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவும் பங்கேற்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். 

முன்னதாக, உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த க்ரைமியாவை கடந்த 2014 -ம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதனையடுத்து, ஜி -7 அமைப்பில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டது. இருப்பினும்,  ஜி -7 மாநாட்டில் ரஷ்யா பங்கேற்ற விரும்புவதாக அறிவித்தது. ரஷ்யா அதிபர் புதினின் விருப்பத்தை முன்மொழிந்த ட்ரம்புக்கு, `ஜி -7 கூட்டமைப்பு தலைவர்கள், ரஷ்யா இந்த மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்ற கருத்தினை ஒருமனதாக ஒப்புக் கொண்டனர்' என்று ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கல் பதிலடி கொடுத்தார். 

இந்நிலையில், கனடாவில் தொடங்கிய உச்சி மாநாட்டில், ட்ரம்புக்கு எதிரான கருத்துகளை நேரடியாக பிற நாட்டின் தலைவர்கள் முன்வைத்தனர். இதற்கு, காரணம், சமீபத்தில் ட்ரம்ப் அரசு தன்னிச்சையாக செயல்பட்டு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது வரி விதித்ததுதான் என்கிறார்கள். ட்ரம்பின் இந்த நடவடிக்கை, ஜி -7 அமைப்பு நாடுகள் இடையில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வரி பிரச்னை மாநாட்டில் பரதிபலித்தது. 

`ட்ரம்பின் இந்த முடிவு சட்ட விரோதமானது' என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்தார். மேலும், வரி கொள்கையை ட்ரம்ப் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதனை, ட்ரம்ப் ஏற்க மறுத்து விட்டார். அதுமட்டுமல்லாமல், மற்ற உறுப்பு நாடுகளை விமர்சிக்கும் வகையில் ட்ரம்ப் பேசினார். இதனால், ஜி -7 கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற ட்ரம்பின் கோரிக்கை மாநாட்டில் எடுபடாமல் போனது. ஒரு கட்டத்தில் ட்ரம்ப் தனித்து விடப்பட்டார்.