வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (10/06/2018)

கடைசி தொடர்பு:17:23 (10/06/2018)

`ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு இது!’ - கிம் ஜாங் உன்னுக்கு ட்ரம்பின் அறிவுரை

வட கொரியா அதிபர் கிம் ஜாங்கை  நேரில் சந்தித்து பேச உள்ள தருணங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

ட்ரம்ப்

எதிரும் புதிருமாக செயல்பட்ட அமெரிக்கா, வடகொரியா ஆகிய நாடுகள் தற்போது சமாதானப் பேச்சுக்கு உடன்பட்டுள்ளன. இதையடுத்து, இரு நாட்டுத் தலைவர்களும் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள தனியார் சொகுசு விடுதி ஒன்றில் வருகிற 12 -ம் தேதி நேரில் சந்தித்து பேச உள்ளானர். இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சிங்கப்பூர் முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இவர்களின் சந்திப்பின்போது, அணு ஆயுத கொள்கைகள், வர்த்தகம் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான பல பிரச்னைகள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டோர் ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் சந்திக்கும் நிகழ்வுகளை உற்று நோக்கி கவனித்து வருகின்றன. 

ட்ரம்ப்

இந்நிலையில், ஜி -7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய ட்ரம்ப், சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான சந்திப்பு குறித்து அவர், வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், `சிங்கப்பூர் சென்று கொண்டிருக்கிறேன். கிம் ஜாங் உடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த சந்திப்பின் மூலம், வடகொரியாவுக்கும் உலகுக்கும் பல்வேறு விவகாரங்களில் சிறப்பான முடிவு எட்டப்படும் என நம்புகிறேன். மேலும், வடகொரியாவில் அமைதியை நிலைநாட்ட, கிம் ஜாங்குக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு இது. இதனை அவர், சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இந்த வாய்ப்பை வீணாக்கி விட வேண்டாம்' எனகுறிப்பிட்டுள்ளார்.