வெளியிடப்பட்ட நேரம்: 15:21 (10/06/2018)

கடைசி தொடர்பு:15:21 (10/06/2018)

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை; லட்சக்கணக்காண வாழைகள் சாய்ந்தன!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழையில் பெருஞ்சாணி அணையில் 2 அடி தண்ணீர் அதிகரித்துள்ளது. சூறைகாற்றில் ஒரு லட்சத்திற்கும் மேல் வாழை மரங்கள் முறிந்ததால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழையில் பெருஞ்சாணி அணையில் 2 அடி தண்ணீர் அதிகரித்துள்ளது. சூறைக்காற்றுடன் பெய்த மழையில் ஒரு லட்சத்திற்கும் மேல் வாழை மரங்கள் முறிந்ததால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சூறைக்காற்றுடன் பெய்த மழையில் சாய்ந்த வாழை மரங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஓகி புயல் வீசியதில் லட்சக்கணக்கான மரங்கள், வாழைகள், 50,000 -கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தது. புயலால் மாவட்டமே சின்னாபின்னமானது. ஓகி புயலுக்கு இன்னும் நிவாரணம் கூட வழங்கி முடியவில்லை. ஓகியில் விழுந்த மரங்கள் கூட முழுமையாக அகற்றப்படவில்லை. ஓகி புயலில் சீர்குலைந்த நிலங்களைப் பண்படுத்தி மீண்டும் விவசாயத்தை முன்னெடுத்தனர் விவசாயிகள். பேச்சிப்பாறை அணையைப் பலப்படுத்தும் பணி நடப்பதால் விவசாயத்திற்குத் தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. ஆனால் கடந்த மாதம் 15 -ம் தேதிக்குப் பிறகு குமரி மாவட்டத்தில் மழை சீசன் தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நேற்று மாலையிலிருந்து இன்று அதிகாலை வரை மாவட்டம் முழுவதும் மழை வெளுத்துவாங்கியது. நேற்று முன்தினம் நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 125.60 மி.மீ மழை பெய்தது. ஆனால் நேற்று இரவு முழுவதும் 625.80 மி.மீ மழை கொட்டித்தீர்த்தது. நேற்று முன்தினம் நிலவரப்படி 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 63.15 அடி தண்ணீர் இருந்தது. பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்ட நிலையிலும் 6.70 அடி தண்ணீர் இருந்தது. ஆனால் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையில் பெருஞ்சாணி அணை ஒரே நாளில் 2.5 அடி அதிகரித்து 65.65 அடி தண்ணீர் உள்ளது. பேச்சிப்பாறை அணையில் 1.8 அடி தண்ணீர் உயர்ந்து இப்போது 8.50 அடியாக உள்ளது. மழை பெய்ததில் மகிழ்ச்சிதான். ஆனால் மழையுடன் இரவு முழுவதும் வீசிய சூறை காற்றில் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் முறிந்து மண்ணில் சாய்ந்தன. 

குலசேகரம், திருவட்டார், கடையால், கிள்ளியூர் , பூதப்பாண்டி என அனைத்துப் பகுதிகளிலும் வாழைத் தோட்டங்கள் முற்றிலும் நாசமாகிவிட்டன. இது மினி ஓகி புயல் போல் இருந்த்தாக மக்கள் தெரிவித்தனர். சூறைக்காற்றில் வாழைகள் அழிந்ததால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஓகி புயலில் அழிந்த விளைபொருள்களுக்கே இன்னும் நிவாரணம் முழுமையாக வழங்கப்படாத நிலையில் சூறைக்காற்றில் சாய்ந்த வாழை மரங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமா என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.