வெளியிடப்பட்ட நேரம்: 17:04 (10/06/2018)

கடைசி தொடர்பு:18:44 (10/06/2018)

'ஜனநாயகத்தின் 4-வது தூணை காப்பாற்றுங்கள்' - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..! #Save4thpillar #SaveTNmedia

ஜனநாயகத்தின் 4-வது தூணை காப்பாற்றுங்கள் (Save4thpillar) என்ற ஹேஸ்டேக் சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஹேஷ்டேக்

கோவை, கள்ளநோட்டு கும்பலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கும் படம் கடந்த வாரம் வெளியானது. இதுகுறித்து செய்தி வெளியிட்டதற்காக, விகடன் மற்றும் Dailyhunt ஆகிய நிறுவனங்கள் மீது கோவை காட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க-வைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் அளித்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல, தனியார் கல்லூரியில் வட்டமேசை மாநாடு நடத்தியதாக, புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் அதன் செய்தியாளர் சுரேஸ் மீதும் கோவை பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கை பத்திரிகையாளர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. சமூக வலைதளங்களிலும் இதுகுறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில், #SaveTNmedia #Save4thpillar போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகிறது. குறிப்பாக, இந்த ஹேஷ்டேக்குகளுடன் கோவையைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள், போலீஸாரின் இந்த நடவடிக்கைகுக்கு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.