`விடைத்தாளின் 6 பக்கங்கள் திருத்தப்படவே இல்லை!' - ஆசிரியர்களின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட பிளஸ் டூ மாணவி

நீட் தேர்வில் மதிப்பெண்கள் குறைந்துவிட்டதால் மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மதிப்பெண்கள் குறைந்தால் உயிரை மாய்த்துக்கொள்வது தீர்வல்ல. ஆனால் தொடரும் அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியத்தால் பாதிக்கப்படுவது என்பது மாணவர்கள்தான் என்பதுதான் கொடுமை. அந்தவகையில் சமீபத்தில் வெளியான பன்னிரண்டாம் பொதுத் தேர்வு முடிவில், மதிப்பெண் குறைந்த மாணவர் ஒருவரின் விடைத்தாளில் 6பக்கங்கள் திருத்தப்படாமலேயே இருப்பது அம்பலமாகி உள்ளது.

விடைத்தாள்கள்

திருச்சி திருவெறும்பூர் சோனாபுரத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் திவ்யா, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில், கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வணிகவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த பன்னிரண்டாம் பொதுத் தேர்வை நன்றாக எழுதியிருந்த திவ்யா, கணக்குப்பதிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவர் அந்தப் பாடத்தில் 200-க்கு 124 மதிப்பெண்களே எடுத்ததாக மதிப்பெண் பட்டியல் வந்தது. அடுத்து அவர், தான் எழுதிய விடைத்தாள் நகல்களைப் பெற்று, சரி பார்த்ததில், அவரின் விடைத்தாளில் 6 பக்கங்கள் திருத்தப்படாமல் இருந்தது தெரிய வந்தது. ஆசிரியர்களின் அலட்சியத்தால் விடைத்தாள் திருத்தாமல் விடுபட்டிருப்பதைக் கண்ட திவ்யா, உடனே திருச்சி மண்டல அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பிறகு நடந்ததைக் கூறிய திவ்யா, “நடந்த தவறு குறித்து, உடனே திருச்சி மண்டல அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் மறுமதிப்பீட்டிற்கான கால அவகாசம் 6-ம்தேதியுடன் முடிஞ்சிடுச்சு என்று கூறியதுடன், சென்னை தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் முறையிடுங்கள் என்றனர். நான் சரியாக எழுதியும், என் விடைத்தாளைத் திருத்தாமல் விட்டுவிட்டதோடு, இதுகுறித்து புகார் செய்தால், சென்னைக்குப் போங்க எனச் சொல்கிறார்கள். ரொம்ப கஷ்டமாக இருக்கு சார். திருத்தாமல் உள்ள 6 பக்கங்களைத் திருத்தினால், சுமார் 60 மதிப்பெண்கள் கிடைக்கும். ஆனால் அதுக்காக சென்னைப் போகனும், அங்கப் போய் எங்க அலைவதுன்னு தெரியல. வீட்டில் அந்தளவுக்கு விவரமானவர்கள் யாருமில்லை. மார்க் குறைந்ததால் காலேஜில் சேர்வதில் ரொம்ப கஷ்டமாக இருக்கு” என்று கலங்கினார்.

திவ்யாவைப் போல், ஹர்ஷினி எனும் மாணவியின் கணக்கு பாட விடைத்தாளில் 6 மதிப்பெண் வினாவிற்கான விடை திருத்தப்படாமலேயே பூஜ்யம் மதிப்பெண் போடப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் திருச்சி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மத்தியில் பரவலாக பரவவே, மாணவர்கள் பலரும் தங்கள் விடைத்தாள் நகல்களை டவுன்லோடு செய்து பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதுதான் திருச்சி மாவட்டத்தில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் திருத்தப்படாத விடைத்தாள்கள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை துவங்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மாணவிகளான திவ்யா, மற்றும் ஹர்ஷினியின் விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்ட மையம், ஆசிரியர்கள் குறித்த விவரங்கள் குறித்த தகவல்கள் குறித்தும், விடைத்தாளில் உள்ள ஆசிரியர்களின் கையெழுத்து மூலம் விசாரணை நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள் மாவட்ட கல்வி அதிகாரிகள். அதிகாரிகளின் அலட்சியத்தால் வஞ்சிக்கப்படுவது மாணவர்களின் எதிர்காலமே!..

Do you like the story?

Please Appreciate the Author by clapping!