ஈரோடு இனி 'ERODE' இல்லை ‘ERODU' - அரசுக்கு டியூஷன் எடுக்கும் தனியார் அமைப்பு!

ஈரோடு

தற்போது வரைக்கும் ஈரோடு மாவட்டத்தை ஆங்கிலத்தில் 'ERODE' என்றே  குறிப்பிட்டு அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து அரசுக் கோப்புகளிலுமே 'ERODE' என்றே இடம்பெற்றிருக்கிறது. இந்தநிலையில், சமீபத்தில் ‘ஒளிரும் ஈரோடு’ என்னும் ஒரு தனியார் அமைப்பு, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றினை அளித்திருக்கிறது. 

அந்த மனுவில், ‘ஆங்கிலத்தில் தற்போது நாம் பயன்படுத்தி வரும் ‘ERODE' என்பதனை 'ERODU' என மாற்றுங்கள். உச்சரிப்பு வகையில் அதுதான் சரியானது’ என குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும், ஆங்கிலத்தில் ‘ERODE' என்றால் அழிவைக் குறிக்கும் என்பதால் அதனை மாற்றக்கோரி அந்த தனியார் அமைப்பு, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததாகச் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் நாம் விசாரிக்கையில், “மாவட்ட நிர்வாகம் இதனை உடனடியாக அமல்படுத்திவிட முடியாது. இந்த கோரிக்கையை பல்வேறு துறைகளுக்கு அனுப்பியிருக்கிறோம். அவர்கள் தான் இதனை பரிசீலித்து முடிவெடுக்க முடியும்” என்றார்.

‘ஒளிரும் ஈரோடு’ என்னும் இந்த தனியார் அமைப்பில், ஈரோடு மாவட்டத்திலுள்ள பல்வேறு பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் நிர்வாகிகளாக இருக்கின்றனர். இந்த நிறுவன முதலாளிகளுக்கு லோக்கல் அமைச்சர்கள் நெருக்கமாகவும், பக்கபலமாகவும் இருந்துவருவதாக குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டு வருகின்றன. இந்த தனியார் அமைப்பானது ‘ERODE' என பயன்படுத்தாமல் ‘OLIRUM ERODU' என்றே ஆரம்பத்திலிருந்து பயன்படுத்தி வருகின்றனர். எனவே, எங்களைப் போலவே நீங்களும் 'ERODU' என பயன்படுத்துங்கள் என மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியது போல் இருக்கிறது. நாளைக்கு ஈரோட்டையே, ‘ஒளிரும் ஈரோடு’ என பெயர் மாற்றம் செய்யுங்கள் என கோரிக்கை வைத்தாலும் வைப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் பலரும் பொருமி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!