வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (10/06/2018)

கடைசி தொடர்பு:21:30 (10/06/2018)

டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டு வீசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்!

தமிழக வாழ்வுரிமை கட்சினர் 15க்கும் மேற்பட்டவர்கள் கையில் கட்சி கொடியுடன் வந்து கட்சியின் தலைவர் வேல்முருகனை விடுதலைச் செய்ய கோரி டாஸ்மாக் நோக்கி 5 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனை விடுதலை செய்யக் கோரி கடலூரில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

டாஸ்மாக்

கடலூர் அருகே கம்மியம்பேட்டையில் அரசு டாஸ்மாக் இயங்கி வருகிறது. மதியம் மேற்பார்வையாளர் ராமலிங்கம் மற்றும் ஊழியர்கள்  கடையில் விற்பனையில் மும்முரமாக இருந்துள்ளனர். அப்போது, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 15க்கும் மேற்பட்டவர்கள் கையில் கட்சி கொடியுடன் வந்துள்ளனர். கட்சியின் தலைவர் வேல்முருகனை விடுதலைச் செய்யக்கோரி, டாஸ்மாக் நோக்கி 5 பெட்ரோல் குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் ஒன்று மட்டும் எரிந்துள்ளது, மற்றவை எரியவில்லை. இதனால் பெரும் சேதம் ஏற்படவில்லை. குண்டு எரிந்ததில் டாஸ்மாக் கடையின் தரை பகுதி மேலும் அருகில் இருந்த வைக்கோல் விற்பனைக் கடையிலும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கடலூர் தீயைணப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். குண்டுவீச்சில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் காரணமாக டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2 நாள்கள் முன்பு நடுவீரப்பட்டில் டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.