வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (10/06/2018)

கடைசி தொடர்பு:07:15 (11/06/2018)

மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகம்!

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளன. 

மருத்துவப் படிப்பு

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேர்க்கை பெறுவதுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. தேர்வின் முடிவுகள், கடந்த 4-ம் தேதி வெளியானது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், 2018- 2019-ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வழங்கப்பட உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் நேரில் சென்றோ அல்லது ஆன்லைனிலோ விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். நாளை முதல் வரும் 18-ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எல்லா நாள்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பப் படிவங்களை நேரில் பெற விரும்புவோர், அதற்கான டிடி எடுத்துக் குறிப்பிட்ட மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnhealth.org அல்லது www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 19-ம் தேதி மாலை 5 மணிக்கு முன்னதாக குறிப்பிட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.