வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (10/06/2018)

கடைசி தொடர்பு:11:21 (11/06/2018)

ஐபிஎல், ஐஎஸ்எல் போல இந்தியாவில் வருகிறது உலகின் முதல் ரேஸ் லீக்!

ஸ்போர்ட்ஸ் என்று எடுத்துக்கொண்டால் அதில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான விளையாட்டு முறைகள் வெற்றியடையும். இந்தியாவில் அப்படி வெற்றியடைந்த ஃபார்மட்தான் சிட்டிகளுக்கு இடையிலான லீக் போட்டி. ஐபிஎல், ஐஎஸ்எல் போன்ற லீக் ஆட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மோட்டார் ஸ்போர்ட்ஸிலும் லீக் வருகிறது. உலகின் முதல் லீக் ரேஸ் இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் தொடங்கவுள்ளது. இதற்கு X1 என்று பெயர்வைத்துள்ளார்கள். 

அர்மான் இப்ராஹிம் ரேஸ் டிரைவர்

இந்திய கார் ரேஸர்களான அர்மான் இப்ராஹிம் மற்றும் ஆதித்யா படேல் இணைந்து இந்த ரேஸ் லீகை உருவாக்கியுள்ளார்கள். இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆணையமான Federation of Motor Sports Clubs of India (FMSCI) இந்தப் போட்டியை நடத்துகிறது. இந்தப் போட்டியில் சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற 8 நகரங்களைக் கொண்ட டீம்கள் இடையே ரேஸ் நடைபெறும். ஒவ்வொரு டீமிலும் 2 கார்களும் 4 டிரைவர்களும் இருப்பார்கள். டீமில் ஒரு ஆண், ஒரு பெண் டிரைவர் கட்டாயம் இருக்க வேண்டும். இந்தியாவில் நடைபெறும் மற்ற போட்டிகளைப்போல ரேஸ் டிராக்கில் மட்டும் பந்தயம் நடக்காமல், உலகளவில் நடைபெறும் ஃபார்முலா ஒன் பந்தயம் போல டிராக் மற்றும் ஸ்டிரீட் ஸர்க்யூட்டில் கலவையாக நடைபெறப்போகிறது. 

டிராக்கில் மட்டும் கலவை இல்லை. டீமிலும், Formula 1, Formula E, Indy500, NASCAR, LeMans போன்ற சர்வதேச பந்தயங்களில் போட்டிபோடும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ரேஸ் டிரைவர், இதே சர்வதேச போட்டிகளில் களம்கண்ட இந்திய ரேஸர் ஒருவர், இந்திய சாம்பியன்ஷிப் போட்டியில் கார் ஓட்டும் ரேஸர் ஒருவர் என வெரைட்டியாக மொத்தம் நான்கு டிரைவர்கள் இருப்பார்கள். இப்போட்டியில் பங்குபெறும் சர்வதேச இந்திய டிரைவர் குறைந்தபட்சம் 5 ஆண்டு அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் என்பது விதி. ரேஸுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு சீட்டர் கார்களை இவர்கள் ஓட்டுவார்கள். 

ஆதித்தியா படேல் கார் பந்தய ஓட்டுநர்

அடுத்த ஆண்டு தொடங்கவிருக்கும் இந்த புதிய ரேஸ் மோட்டோஜிபி, ஃபார்முலா ஒன் போல இந்தியாவுக்கு ரேஸ் உலகில் கமர்ஷியல் வெற்றியைத் தேடித்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு டீமிலும் பெண் டிரைவர்கள் இருப்பதால் இந்த ரேஸுக்கு பெண்களின் சப்போர்ட்டும் அதிகமாகவே இருக்கும். தொடர்ந்து நான்கு வாரங்கள் நடைபெறும் இந்த லீகில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் மூன்று 45 நிமிட ரேஸ் இருக்கும். நொய்டாவின் புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் மற்றும் மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக் மட்டுமில்லாமல் ஹைதரபாத், பெங்களூர், சண்டிகர் மற்றும் மும்பை போன்ற இடங்களில் ஸ்ட்ரீட் சர்க்யூட்டும் நடைபெறப்போகிறது. கார்கள், டிரைவர்கள் சம்பளம் மட்டுமல்லாமல் ரேஸ் நடத்த ஒரு டீமுக்கு லாஜிஸ்டிக்ஸ் மிக முக்கியம். எல்லாவற்றையுமே சேர்த்து தோராயமாக ஒரு டீம் நடத்த 6 முதல் 7 கோடி ரூபாய் தேவைப்படும். அடுத்த ஆண்டில் இருந்து இந்த ரேஸ் நடைபெறவுள்ளது. இதேபோல 2012-ம் ஆண்டு I1 சூப்பர் சீரீஸ் என்ற போட்டியை கொண்டுவந்தார்கள். 2013-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு பிறகு ரத்து செய்யப்பட்டுவிட்டது.

இந்தியாவில் வேகத்துக்கான காதலும், வேகத்தை நம்பியே வாழ்க்கை நடத்தும் அளவு ரேஸ் மீது ஆர்வமும் இருந்தாலும் மற்ற விளையாட்டைப்போல இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கமர்ஷியலாக வெற்றிபெறவில்லை. ஆனால், ஐபிஎல், ஐஎஸ்எல் போன்ற வெற்றிகரமான ஃபார்மட் இந்திய ரேஸ்களில் தனியார் நிறுவனங்களின் முதலீடுகளைக் கொண்டுவரும். இதன் மூலம் கமர்ஷியல் வெற்றியை மட்டுமல்ல இந்திய ரேஸர்களில் வேகத்தையும் உலகத்துக்குக் காட்ட முடியும்.