வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (10/06/2018)

கடைசி தொடர்பு:16:40 (10/09/2018)

ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் 30ல் 26 மாணவர்கள் தேர்ச்சி - அசத்தும் சூப்பர் 30!

ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வின் Joint Entrance Examination (JEE) முடிகள் இன்று வெளியானது. இத்தேர்வில், சூப்பர் 30 பயிற்சி மையத்தைச் சேர்ந்த 26 மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். 

சூப்பர் 30

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த கணிதப் பேராசிரியர் ஆனந்த்குமார். இவர், கடந்த 2002-ம் ஆண்டில் 'Ramanujan School of Mathematics ' என்ற பெயரில் ஐஐடி-க்கான பயிற்சி மையத்தைத் தொடங்கினார். படிக்க வசதியில்லாத 30 ஏழை மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். தகுதியுடைய மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் இங்கு, தங்கும் வசதியில் இருந்து உணவு வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும், ஐஐடி நுழைவுத்தேர்வு பயிற்சிக்காக, தன்னிடம் படிக்கும் எந்த மாணவர்களிடம் இருந்தும், இதுவரையிலும் கட்டணம் வசூலித்ததில்லை ஆனந்த்குமார். இதனால், இவர் நடத்தி வரும் பயிற்சி நிறுவனம் மற்ற நிறுவனங்களிடம் இருந்து சற்றே வித்தியாசப்படுத்திக் கொண்டுள்ளது. சென்ற ஆண்டு வெளியான ஜே.இ.இ முடிவில் இப்பயிற்சி மையத்தில் பயின்ற 30 மாணவர்களும் தேர்ச்சி பெற்று அசத்தினர். இந்த ஆண்டு 30 மாணவர்களில் 26 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து பேசிய ஆனந்த்குமார், `கடந்த ஆண்டு 30 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனால்,100 சதவிகித தேர்ச்சியைக் கொண்டாடினோம். ஆனால், இம்முறை 30ல் 26 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருந்தபோதும், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களிடம் எனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன்' என்றார்.