`கர்நாடகாவின் ஊதுகுழல் எடப்பாடி' - காவிரி விவகாரத்தில் கொந்தளிக்கும் பெ.மணியரசன்

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிகமாக மழை பெய்துள்ளது. கர்நாடக அரசின் புள்ளி விவரங்களே இதைத் தெரிவிக்கின்றன. ஆனால், தமிழக முதல்வர் பழனிசாமி, கர்நாடகாவுக்குச் சாதமாக பொய்யான தகவல்களைப் பேசி தமிழக மக்களுக்குத் துரோகம் இழைக்கிறார் என பெ.மணியரசன் குற்றம் சாட்டியுள்ளார். 

பெ மணியரசன்

பருவமழை பொய்த்துப் போனதால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு ஜுன் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க இயலாது எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன். இதுகுறித்து பேசிய அவர் ‘’கர்நாடகாவின் நீர்பிடிப்புப் பகுதிகளில் ஜனவரி 1 முதல் மே 31 வரை வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிகமாக மழை பெய்துள்ளது. பெங்களூருவில் வழக்கமான மழை அளவு 230 செ.மீ இந்த ஆண்டு 309 செ.மீ மழை பெய்துள்ளது. மாண்டியாவின் வழக்கமான மழை அளவு 184 செ.மீ. இந்த ஆண்டு 295 செ.மீ மழை பெய்துள்ளது. சாம்ராஜ் நகரில் வழக்கமாக 230 செ.மீ மழை பெய்யும். இந்த ஆண்டு 309 செ.மீ பெய்துள்ளது. இதைக் கர்நாடக அரசின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன. ஆனால், கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு சட்டப்படி தர வேண்டிய காவிரி நீரைத் தர மறுக்கிறது. 

இதனால்தான் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க இயலாத சூழல் உருவாகியுள்ளது. இதை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி காவிரி நீரைப் பெறுவதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் கர்நாடகாவின் ஊதுகுழலாக அவர்களுக்குச் சாதகமாக செயல்படுகிறார். பருவமழை பெய்யாததால் மேட்டூர் அணையை ஜூன் 12-ம் திறக்க இயலாது எனத் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல், நா கூசாமல் பொய் சொல்கிறார். அங்கு எவ்வளவு மழை பெய்துள்ளது, எவ்வளவு பற்றாக்குறை, அங்குள்ள அணைகளின் தற்போதைய நீரின் அளவு உள்ளிட்ட விவரங்களைத் தமிழக முதல்வர் தெரிவிக்க வேண்டும். கர்நாடகம் தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கு 9 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். இதை ஏன் தமிழக முதல்வர் கேட்க மறுக்கிறார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மே 31-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு உருவாக்கியிருக்க வேண்டும். 

தமிழக முதல்வர் இதுகுறித்து வாய் திறப்பதே இல்லை. காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். ஆனால், தமிழக முதல்வர் இதை மூன்றரை லட்சம் ஏக்கர் என குறைத்துச் சொல்கிறார். இதற்குத் தண்ணீர் தேவைப்படும். இதை எங்கிருந்து விவசாயிகள் பெற முடியும். நிலத்தடி நீர் அதிக ஆழத்துக்குச் சென்று, உப்புத் தன்மை வந்துவிட்டது. ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறந்தால்தான் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும் என சொல்லப்படுவது உண்மையல்ல. இந்தக் கருத்து கர்நாடகாவுக்குச் சாதகமானது. கர்நாடாவிடம் தண்ணீர் பெற்றுவிட்டால் ஆகஸ்டு 10-ம் வரையிலும் கூட குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!