தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீது தாக்குதல்... மருத்துவமனையில் அனுமதி!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன், தஞ்சையில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

பெ மணியரசன்

இன்று (10.06.2018) தஞ்சையிலிருந்து சென்னை வருவதற்காக பெ.மணியரசன் தனது உதவியாளருடன் ரயில் நிலையத்துக்கு பைக்கில் வந்துகொண்டிருந்தார். இரவு சுமார் 8.30 மணியளவில் எதிரே பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவரை பைக்கில் இருந்து கீழே தள்ளித் தாக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். கை மற்றும் கால்களில் சிராய்ப்புடன் கூடிய காயங்களுடன் இருந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி பெ.மணியரசனின் உதவியாளரைத் தொடர்புகொண்டு பேசியபோது ``சென்னை செல்வதற்காக இன்று இரவு 9.15 ரயிலில் டிக்கெட் போடப்பட்டிருந்தது. ரயிலைப் பிடிப்பதற்காக தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்துக்கு உதவியாளர் ஒருவருடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது நட்சத்திர நகர் வரும்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பைக்கில் எதிர்த் திசையில் வந்து அய்யாவின் இடது கையைப் பிடித்து கீழே தள்ளி தாக்கிவிட்டுத் தப்பித்துச் சென்றுவிட்டனர்.

கை மற்றும் காலில் காயம் பட்டிருந்த அய்யாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தோம். இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறோம் என்றார்." மேலும் பெ.மணியரசனைத் தாக்கிய அந்த இரண்டு நபர்களும் தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து கண்காணித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!