வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (11/06/2018)

கடைசி தொடர்பு:11:54 (11/06/2018)

18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவேண்டும் - இஃப்தார் விருந்தில் தங்க தமிழ்ச்செல்வன் வேண்டுதல்

'சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க இறைவனை வேண்டுகிறோம்' என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் பேச்சு.

'சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்த வழக்கில், நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க இறைவனை வேண்டுகிறோம்' என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசியுள்ளார்.

தங்கதமிழ்ச்செல்வன் 

ராமநாதபுரத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மைப் பிரிவு சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கட்சியின்  மாவட்டச் செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., முத்தையா, மாநில மகளிரணிச் செயலாளர் கவிதா சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசுகையில்,  ``பசியின் கொடுமையைப் புரிந்துகொள்ள வேண்டும். பசியோடு இருப்பவருக்கு உதவிட வேண்டும் என்ற காரணத்துக்காகவே, ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. ரமலான் மாதத்தில், கடைசி 10 நாள்கள் கடைப்பிடிக்கப்படும் நோன்பு மிக முக்கியமானது. இந்த நாள்களில், இறைவனிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறுவதாக நம்பப்படுகிறது. 

இந்த நாளில், 18 பேரவை உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்வது தொடர்பான வழக்கின் தீர்ப்பை விரைவாக வழங்கிட வேண்டும் என இறைவனை வேண்டுவோம். தனியாகப் பிரார்த்தனை செய்வதைவிட, கூட்டுப்பிரார்த்தனைக்குப் பலம் அதிகம். அந்த வகையில், அனைவரும் கூட்டாகச் சேர்ந்து விரைவில் தீர்ப்பு வழங்க இறைவனிடம் வேண்டுவோம். தீர்ப்பு எப்படி வரும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். தீர்ப்பு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ வந்தாலும், எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். பாதகமாக வந்தால் இடைத்தேர்தலில் நின்று வெற்றிபெறுவோம் என்பதில் எந்தச் சந்தேகமும் தேவையில்லை. எங்கள் அணியிலிருந்து 16 பேர் வேறு கட்சிக்கு செல்லப்போவதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறானது. கட்சியில் உள்ள 18 பேரும் ஒற்றுமையாகச்செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்'' என்றார்.  நிகழ்ச்சியில் த.மா.கா-வின் ராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, ராமேஸ்வரம் முன்னாள் நகர் மன்றத் தலைவர் அர்ச்சுனன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜி.முனியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.