`கணவரின் 2-வது திருமணத்தை நிறுத்திய பெண்' - சிக்கிய வாலிபர்!

திருச்சி அருகே, முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது கல்யாணம் பண்ண முயன்ற வாலிபர் சிக்கினார்.

லாவண்யா

இன்று முகூர்த்தநாள் என்பதால், திருச்சி வயலூர் முருகன் கோயில் வழக்கத்தைவிட அதிகமான கூட்டம் நிரம்பி வழிந்தது. கோயிலுக்குள் அடுத்தடுத்து திருமணங்கள் நடந்துகொண்டே இருந்தன. அப்போது, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள கோரி மேடு பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் சுரேஸ்குமாருக்கும், சுகந்தி என்பவருக்கும் திருமணம் நடக்க இருந்தது. மணக்கோலத்தில் மாப்பிள்ளையும் பெண்ணும் வந்து நிற்க, அங்கு வந்த பெண் ஒருவர், ``என்னைக் கல்யாணம் பண்ணி என் வாழ்க்கை வீணாக்கியதைப் போல, இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் வீணடிக்க விடமாட்டேன்” எனத் தனது கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் தகராறு செய்ய, மொத்தக் கூட்டமும் ஆடிப்போனது.

திருமணத்துக்கு வந்தவர்கள் எல்லோரும் அதிர்ச்சியில் நிற்க, விடாப்பிடியாக திருமணக் கோலத்தில் இருந்த பெண்ணிடம், ``இவர் என் புருஷன், இது என் குழந்தை. எங்களுக்குக் கல்யாணம் ஆகி ஆறு வருஷம் ஆகுது. இந்தாளு என்னை ஏமாத்திட்டு உன் வாழ்க்கையைச் சீரழிக்க நினைக்கிறான். இங்கிருந்து போயிடும்மா” எனக் கெஞ்சினார். அடுத்து, தகவலறிந்து வந்த திருச்சி ஜியர்புரம் போலீஸார் மாப்பிள்ளைக் கோலத்தில் இருந்த சுரேஸ்குமாரைக் கைதுசெய்தது. இந்த விவகாரத்தில், போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுரேஸ்குமார் திருமணத்தை நிறுத்திய திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த கொளக்குடியைச் சேர்ந்த லாவண்யா நம்மிடம் பேசினார். ``எனக்கும் அவருக்கும் கடந்த 2012 ஜூலை 12-ம் தேதி திருச்சி சமயபுரத்தில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு, அவர் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து சித்ரவதை செய்ய ஆரம்பித்தார். கூடவே எனது மாமியார் பானுமதியும் சேர்ந்து என்னைக் கொடுமைப்படுத்தினார்கள். இதுகுறித்து அப்போதே திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன்.

இந்நிலையில், எனக்குப் பெண் குழந்தை பிறந்தாள். பெண் குழந்தை பிறந்ததால் என்னைப் புறக்கணிக்க ஆரம்பித்தார். அவரின் கொடுமை தாங்காமல், அப்பா வீட்டுக்கு வந்து தங்கியிருந்தேன். அவரும் என்னைக் கூப்பிட வரல. பெத்தவங்க என்னையும் என் குழந்தையையும் பார்த்துக்கிட்டுவர்றாங்க. 

இந்நிலையில், நேற்று இரவு எனக்கு போன் பண்ணிய யாரோ ஒருவர்,  `உன் புருஷனுக்கு ரெண்டாவது கல்யாணம் நடக்கப்போகுது'னு சொன்னாங்க. முதல்ல நான் நம்பல.  இப்போ, நேர்ல வந்தபோதுதான் உண்மை புரிஞ்சுது. எங்க மாமனாருக்கு ரெண்டு மனைவிங்க. அதே போல தன் மகனுக்கும் பண்ண நினைக்கிறது சரியா? மகனைத் திருத்த முடியாம, இன்னொரு கல்யாணம் பண்ணிவச்சா எல்லாம் சரியாகிடும்னு நினைக்கிறாங்க. என்னைக் கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையை சீரழித்ததைப் போல இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைச் சீரழிக்க விடக் கூடாதுனு கல்யாணத்தைத் தடுத்து நிறுத்தினேன்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!