திருச்சியை மிரட்டிய சூறைக்காற்று…. 2 பேர் பலியான சோகம்

கடந்த சில வாரங்களாக, சுட்டெரிக்கும் வெயில் திருச்சியில் கூடுதலாக அடித்தது. இந்நிலையில், சில தினங்களாகக் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில், இன்று லேசாக  தூறல் விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் வீசிய சூறைக்காற்று, திருச்சி மாநகரை உலுக்கியெடுத்தது.

பேய்க் காற்றால், சாலைகளில் குப்பை மற்றும் தூசுகள், மரக்கிளைகள் பறந்தன. இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். திருச்சி மாநகரில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் சாய்ந்தன. இதனால் நேற்று, திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானம் அருகிலுள்ள சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல, திருச்சி-மதுரை சாலை பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், திருச்சி நீதிமன்றச் சாலையில் உள்ள தாலுகா அலுவலகம் அருகே இருந்த 50 வருஷ காலத்து அரசமரத்தின் கிளை ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. அடுத்து, திருச்சி மாநகர் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. 

இந்நிலையில், திருச்சி-புதுக்கோட்டை சாலையில் ஆவின் பால்பண்ணை அருகே, பெரிய மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில், அருகில் இருந்த மின்கம்பத்தில் விழுந்து மின்கம்பம் சாய்ந்தது. இதனால், அப்பகுதியிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அப்பகுதியில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றை உடனடியாக மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் சீரமைத்தனர். இப்படி நேற்று வீசிய சூறைக்காற்று, திருச்சியை ஆட்டிப்படைத்தது. 

சூறைக்காற்று

இந்நிலையில், இன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பலத்த காற்று வீசியது. அதில், மணப்பாறை அடுத்த கருஞ்சோலைப்பட்டியில் வீசிய பலத்த காற்றில் புளியமரம் சாய்ந்து, அந்த வழியே சென்ற இருசக்கர வாகனம்மீது விழுந்ததில், வாகனத்தை ஓட்டிவந்த பூமாரிராஜு மற்றும் மனோகர் எனும் இருவர் உயிரிழந்தனர். இதேபோல, திருச்சி ஜீயர்புரம் திருச்செந்துறை கோயில் அருகே அரசமரம் விழுந்ததில், நாகலெட்சுமி என்ற பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தால், திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!