``எனக்கு, யாரும் பாடம் நடத்த வேண்டிய அவசியம் கிடையாது!'' - திருநாவுக்கரசர் காட்டம்

``எனக்கு, யாரும் பாடம் நடத்த வேண்டிய அவசியம் கிடையாது!'' - திருநாவுக்கரசர் காட்டம்

'திருநாவுக்கரசர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் சரிவர செயல்படவில்லை. மக்கள் பிரச்னைகளிலும் முழு மூச்சுடன் போராடுவதில்லை' என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறார் அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். 

தமிழகக் காங்கிரஸ் கட்சிக்குள் தலைவர்களிடையே வேறுபாடுகள் எழுவதும், அவர்களது தொண்டர்கள் சத்தியமூர்த்தி பவனுக்குள்ளேயே கோஷ்டிகளாகப் பிரிந்துநின்று அடித்துக்கொள்வதும் வழக்கமான நிகழ்வுகள். அந்தவகையில், தற்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மீது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் அவரது ஆதரவாளரான குஷ்பூ ஆகியோர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். 

திருநாவுக்கரசர்

இந்நிலையில், ஈ.வி.கே.எஸ் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசரிடம் பேசினோம்...

``ஓர் அரசியல் இயக்கம் மக்களிடையே பேசப்படுகிற இயக்கமாக, மக்களுக்காகக் குரல் கொடுக்கிற இயக்கமாக இருக்க வேண்டும். அந்தவகையில், மக்கள் பிரச்னைகளில் காங்கிரஸ் உடனுக்குடன் தனது எதிர்ப்பைக் காட்டிவருகிறது.

பெட்ரோலிய விலை உயர்வை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறோம். இதற்குமுன்னதாக 'வன்கொடுமை தடுப்பு சட்ட'த் திருத்தம் உச்சநீதிமன்றத்தில் வந்தபோது அதை எதிர்த்து நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம்.
இதேவரிசையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரானப் போராட்டங்கள் என தொடர்ந்து பொதுப் பிரச்னைகளுக்காகக் காங்கிரஸ் கட்சி போராடிவருகிறது. 

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தற்போது தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கை நடந்துமுடிந்திருக்கிறது. இதில், 35 முதல் 40 லட்சம் உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைந்திருக்கிறார்கள். இதுதவிர, ஒரு பூத் கமிட்டிக்கு 5 உறுப்பினர்கள் என்ற அடிப்படையில்,  தமிழ்நாடு முழுக்க 65 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு கட்சிக்கான பலம் என்பது தொண்டர்களும் கட்சியின் கட்டமைப்பும்தான். வட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் உட்கட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவைதவிர மாணவர் அணி, விவசாய அணி, மகளிர் அணி, சிறுபான்மை அணி உள்ளிட்ட 23 அணிகள் இருக்கின்றன. எனவே, காங்கிரஸ் கட்சி இன்றையச் சூழலில், பலமான கட்சியாக இருக்கிறது.''

``மம்தா, சந்திரசேகரராவ் கட்சியினரோடு தி.மு.க கூட்டு சேர்ந்தால், தி.மு.க-வுக்கு எந்தப் பயனுமில்லை' என்கிறீர்களே... தி.மு.க-வை மிரட்டுகிறீர்களா?''

``மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், சந்திரசேகர ராவின் 'தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி' கட்சியும் தமிழ்நாட்டிலேயே இல்லை என்றுதான் நான் சொன்னேன். மற்றபடி தி.மு.க-வுக்கு எந்தப் பயனுமில்லை என்றெல்லாம் நான் சொல்லவே இல்லை!''

``காவிரிப் போராட்டக் களத்தில்கூட காங்கிரஸ் கட்சியினர் கோஷ்டிகளாகப் பிரிந்து நின்று அடித்துக்கொள்கிறார்களே....?''

``அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. பத்திரிகைகளில் வெளிவந்தவை எல்லாமே மிகைப்படுத்தப்பட்ட செய்திகள்.''

`` `தி.மு.க-வுக்கு எதிராக திருநாவுக்கரசர் செயல்படுகிறார்' என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகத் தொடர்கிறதே...?''

``அடிப்படை ஆதாரம் இல்லாத இதுபோன்ற வதந்திகளை வியாபார நோக்கத்துக்காகவும் பரபரப்புக்காகவும் சிலர் பரப்பி வருகின்றனர். நான் யார் என்பது எனக்குத் தெரியும்; நான் என்ன சொல்ல வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும்.

பல்வேறு அரசியல் தலைவர்களையும் அருகிலிருந்து பார்த்துப் பயிற்சி பெற்று வந்தவன் நான். எம்.எல்.ஏ., எம்.பி., மத்திய - மாநில அமைச்சர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் என 40 வருடங்களாக அரசியலில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துவருகிறேன். எனக்கு, யாரும் பாடம் நடத்தவேண்டிய அவசியம் கிடையாது!''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!