சொந்த நாட்டுக்குச் சென்றுவிட்டன பறவைகள்! வேடந்தாங்கல் சரணாலயம் மூடப்பட்டது | vedanthangal birds sanctuary closed, after birds back to home

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (11/06/2018)

கடைசி தொடர்பு:11:09 (11/06/2018)

சொந்த நாட்டுக்குச் சென்றுவிட்டன பறவைகள்! வேடந்தாங்கல் சரணாலயம் மூடப்பட்டது

புகழ்பெற்ற வேடந்தாங்கல் சரணாலயத்தில் தண்ணீர் குறைந்து பறவைகள் சென்றுவிட்டதால், சரணாலயம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இனப்பெருக்கத்துக்காக வந்த பறவைகள், தமது குஞ்சுகளுடன் சொந்த நாட்டுக்குப் புறப்பட்டுவிட்டதால், வேடந்தாங்கல் வெறிச்சோடிக்கிடக்கிறது. நேற்று மாலையுடன் வேடந்தாங்கல் சரணாலயம் மூடப்பட்டது.

பறவைகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது, வேடந்தாங்கல் சரணாலயம். இங்கு, பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்யக்கூடிய சூழல் இருப்பதால், பல்வேறு நாடுகளிலிருந்தும் சுமார் 25 வகையான பறவைகள் வருடந்தோறும் வருகின்றன. கடந்த வருடம், தென்மேற்குப் பருவமழை சராசரியாகப் பெய்தது. அதைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழையின் காரணமாக வேடந்தாங்கல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும், பறவைகள் இரைதேடுவதற்கு வசதியாக சுற்றுவட்டார ஏரிகளில் நீர் நிறைந்தன. இதனால், கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி, பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டது.

இலங்கை, பர்மா, ஆஸ்திரேலியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 25 வகையான பறவை இனங்கள் வேடந்தாங்கலுக்கு வருகின்றன. சுமார் 40,000 பறவைகள் ஆண்டுதோறும் வரும். இங்கு வரும் பறவைகள், 50 கிலோ மீட்டர் வரை சென்று இரை தேடும். செப்டம்பரில், நத்தைகொத்தி நாரைதான் முதலில் வரத்தொடங்கும். அதைத் தொடர்ந்து, குருட்டுக் கொக்கு, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, பெலிக்கன் உள்ளிட்ட பறவைகள் வரும். அதற்குப்பின், புள்ளி மூக்கு வாத்து, முக்குளிப்பான், ஊசிவால் வாத்து உள்ளிட்ட வாத்து வகைகள் வரத்தொடங்கும். கடைசியாக டிசம்பர் மாதத்தில், வர்ண நாரைகள் வரத்தொடங்கும். மே மாதத்தில், தண்ணீரின் அளவு மிகக் குறைந்துவிடும். இதனால், மே மாதத்திலிருந்து அவை தமது குஞ்சுகளுடன் புறப்பட்டுவிடும். இந்த வருடம், ஒரு சில பறவைகளைத் தவிர மற்றவை, புறப்பட்டுவிட்டன. இதனால், நேற்று மாலையுடன் சரணாலயம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்தது. மேலும், பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவருவதால், பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. இந்த வருடம், சுமார் 1,16,000 பேர் வேடந்தாங்கலுக்கு வந்துசென்றுள்ளனர்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க