Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

``இனிமே தேவையில்லாமல் எந்தப் படத்தைப் பற்றியும் கருத்து சொல்றதா இல்லை!'' - `மெர்சல்’, `காலா’ குறித்து தமிழிசை #VikatanExclusive

மிழிசைக்கும் சர்ச்சைகளுக்கும் எப்போதும் இணக்கமான தொடர்பு இருக்கும்போல. ஒரு விஷயத்தைப் பற்றி அவர் கருத்து சொல்வதும் அதை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்வதும் வாடிக்கையாகிவிட்டன. முன்பு, `மெர்சல்’ திரைப்படம் பற்றிக் கருத்து சொல்லி சர்ச்சைக்கு உள்ளானார். இப்போது, ரஜினியின் `காலா’ படத்தை முதல் நாளில் பார்த்து, கருத்து தெரிவித்திருக்கிறார். அதுவும் மீம்ஸ், ட்ரோல் என இணையதளத்தில் வைரலாகிவருகிறது. இதுதொடர்பாக அவரிடம் பேசினோம்...

 

தமிழிசை
 

 

`` `காலா’ படத்தைப் பார்த்துட்டீங்க. படம் எப்படி இருக்குது?"

``ரஜினிகாந்த் உள்ளிட்ட எல்லா நடிகர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப விஷயங்கள் நன்றாக இருந்தது. சமூகப் பிரச்னையைப் பிரதிபலிக்கும் கதை மற்றும் அரசியல் விஷயங்களுடன் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தைப் பார்த்தேன்; ரசித்தேன்."

``முதல் நாளே `காலா'வை பார்க்கச் சென்றதன் காரணம்?" 

"நான் படம் பார்ப்பது அரிதுதான். இருப்பினும் சமுதாயக் கருத்துகளைப் பேசும் படங்களை மட்டுமே பார்ப்பேன். இதற்கு முன் `அறம்' படம் பார்த்தேன். ரஜினிகாந்த்தின் படத்துக்கு எப்போதும் எதிர்பார்ப்பு இருக்கும். இம்முறை மக்கள் பிரச்னை, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னையை முன்னெடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாக எங்கள் கட்சி நிர்வாகிகள் சொன்னார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றத்துக்காக நான் பெரிதும் குரல் கொடுப்பவள். அதனால்தான் பார்த்தேன். தவிர, தனிப்பட்ட எந்த உள்நோக்கமும் காரணமும் இல்லை."

"படத்தில் சொல்லியிருக்கிற  அரசியல் ரீதியான எல்லா கருத்துகளுக்கும் உடன்படுறீங்களா?" 

``கருத்து சுதந்திரத்துடன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். சில கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். அதை நான் வெறும் படமாக மட்டுமே பார்த்தேன். அதனால், அந்தக் கருத்துகளை நான் ஆதரிக்கவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை."

காலா ரஜினி

``கிளீன் இந்தியா திட்டம், தலித் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள்னு... பா.ஜ.கா-வை வெளிப்படையாக விமர்சனம் செய்கிற மாதிரியான காட்சிகள் இருக்கிறதே..." 

``கிளீன் இந்தியா திட்டத்தை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் படத்தைப் பார்ப்பவர்கள், உடனே எங்கள் கொள்கை மற்றும் கட்சியை விமர்சிக்க மாட்டார்கள் என நம்புகிறேன். ஏனென்றால், மக்களுக்கு உண்மை தெரியும். நாடு முன்னேறவும் மக்களின் நலனுக்காகவும் எங்கள் கட்சி செய்யும் நல்ல விஷயங்களை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்; ஆதரிக்கிறார்கள். வில்லன் கேரக்டரைப் பற்றியும் விமர்சிக்கிறார்கள். அதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மேலும், அந்தப் படத்தை வைத்து நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. படத்தில் இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்களையும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்துக்களையும் தூண்டிவிட்டு சமூக விரோதிகள் சிலர் கலவரத்தை ஏற்படுத்துவதாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அதில், நேரடியாக எங்கள் கட்சியைப் பற்றிச் சொல்லப்படவில்லையே. எங்கள் கட்சியையோ அல்லது பிற கட்சியினரையோ விமர்சித்திருப்பதாக நான் நினைக்கவில்லை. மாறாக ஒரு படத்தைச் சித்திரித்து, எதிர்த்துப் பிரச்னையை உண்டாக்கினால், சுதந்திரமாகப் படம் எடுக்கவே திரையுலகினர் அஞ்சுவார்கள். எந்த மதத்தையும் தாக்கக் கூடாது; தனி நபர் விமர்சனம் கூடாது. ஒரு கட்சி மற்றும் அமைப்புகளை அவதூறாகப் பேசக் கூடாது. பிறர் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கிறேன். அப்படியான அம்சங்கள் எதுவும் `காலா' படத்தில் இல்லை. ஒரு படத்தை, வெறும் பொழுதுபோக்குப் படமாக மட்டுமே பார்க்க வேண்டும். என் கருத்து அதுதான். பிறரும் அப்படிப் பார்த்தால் எந்தப் பிரச்னையும் வராது."

``அப்புறம் ஏன் மெர்சல் படத்துக்கு நீங்களும் உங்கள் கட்சியினரும் கடுமையா விமர்சனம் பண்ணினீங்க?" 

"அந்தப் படத்தில் ஜி.எஸ்.டி வரி பற்றிய தவறான தகவல் இருந்தது. ஒரு விஷயத்தை மேலோட்டமாகச் சித்திரித்துச் சொல்வதற்கும் நடைமுறைக்கு மாறான ஒரு தவறான செய்தியைக் கூறுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. 'மெர்சல்' விவகாரத்தில், ஜி.எஸ்.டி பற்றிய தவறான கருத்தை மட்டுமே நான் எதிர்த்தேன். மாறாக, `சென்சார் செய்ய வேண்டும், படத்தைப் திரையிடக் கூடாது’ என ஒருபோதும் நான் சொல்லவில்லை. அந்தப் படம் மிகப்பெரிய சர்ச்சையாக மாறும் என நான் நினைக்கவில்லை. அதேசமயம் எங்கள் கட்சியினர் ஒவ்வொருவரும் கூறிய மாறுபட்ட கருத்துகளுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. 

`மெர்சல்' படத்தின்போதே பெரிய சர்ச்சையும் விவாதங்களும் ஏற்பட்டன. அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால், படம் பார்த்த எங்கள் கட்சியினர் மற்றும் மருத்துவர்கள் மூலமாக எங்கள் கட்சிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை அறிந்துதான் என் கருத்தைக் கூறினேன். அந்தப் படத்தின் மூலம் எனக்குக் கிடைத்த பாடம் முக்கியமானது. அதனால்தான், விவாதப் பொருளாக இருக்கக்கூடும் எனக் கூறப்பட்ட படத்தை நாமே பார்த்துவிட்டால் எளிதாகக் கருத்துக் கூறலாம்; விமர்சிக்க வேண்டிய அவசியம் இருந்தால் என் கருத்தை வெளிப்படையாகக் கூறலாம் என்ற நிலைப்பாட்டுக்கு வந்தேன். அப்படிதான் தற்போதும் `காலா' படத்தைப் பார்த்தேன். இனி, தேவையில்லாமல் எந்தப் படத்தைப் பற்றியும் கருத்து சொல்லப் போவதில்லை."

``ரஜினி பா.ஜ.க-வுக்கு ஆதரவானவர்ங்கிற பேச்சு இருக்கே... அதனாலதான், `காலா'வை உங்கள் கட்சிக்காரங்க எதிர்க்கலையா?"

``நிச்சயம் இல்லை. ரஜினிக்குப் பதிலாக விஜய் நடித்திருந்தாலும்கூட... `காலா' படத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது." 

"உங்களை அவதூறாகப் பேசினதுக்காகச் சூர்யா தேவி என்ற பெண்ணைக் கைது செய்யப்பட்டிருக்காங்க. ஆனா, ஒட்டு மொத்த ஊடகப் பெண்களையும் தவறாகப் பேசின எஸ்.வி.சேகர் இதுவரை கைது செய்யப்படவில்லையே..."

"என்னங்க இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீங்க... பெண்கள் உட்பட யார் மீதும் தனிநபர் தாக்குதல் கூடாது. நீங்கள், எஸ்.வி.சேகர் விவகாரத்தையும் என்னை விமர்சித்தப் பெண்ணையும் ஒப்பிடக் கூடாது. உங்கள் அம்மா, சகோதரி இடத்தில் என்னைப் பொருத்திப் பாருங்கள். அப்போதுதான் என் உணர்வுகள் புரியும். அதேசமயம், எஸ்.வி.சேகர் பேசியது தவறுதான். அவரைக் கைது செய்யும் பொறுப்பு என்னுடையதோ எங்கள் கட்சியினருடையதோ இல்லை. காவல்துறையினர்தானே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் அரசியல் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எஸ்.வி.சேகர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்தான். அவர் இன்னும் சரணடையாததால், பி.ஜே.பி-க்குதான் அவப்பெயர் எனப் பலரும் கூறிவருகின்றனர். அது எனக்கும் தெரிகிறது. இந்நிலையில், எங்கள் கட்சிப் பெயர் கெடக்கூடாது என நான் முன்னெடுக்கும் சில விஷயங்களை வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை."

"உங்களையும் மீம்ஸையும் பிரித்துப் பார்க்க முடியாது என்ற நிலை உண்டாகியிருக்கே..."

"நான் துணிச்சலாகப் பணியாற்றுகிறேன். அதைத் தடுக்க, சில வக்கிரப் புத்தி கொண்டவர்களும் மீம்ஸ் கிரியேட்டர்களும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போதும் நான் சவாலாக இருப்பதாகவே நினைக்கிறேன். அவர்கள் எனக்கு எதிராக இயங்க இயங்க, அதைவிட வீரியத்துடன் நான் பணியாற்றுவேன்."

ஸ்டெர்லைட்

``தூத்துக்குடி சம்பவத்தில் ரஜினி கூறிய கருத்துக்கு உங்கள் கருத்து என்ன?"

``ஆரம்பத்திலிருந்து அமைதி வழியில் போராடிய மக்கள், 100 வது நாளும் அமைதியாகவே போராடினார்கள். அப்போது கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்துடன் சில சமூக விரோதிகள் கூட்டத்தில் நுழைந்தனர். அதைத்தான் ரஜினியும் சொன்னார். அதுதான் என் கருத்தும்கூட. ஆனால், ரஜினியின் கருத்தை அரசியலாக்க வேண்டும் என்றே பல்வேறு கட்சியினரும் மக்களைக் குழப்புகின்ற வேலையைச் செய்கின்றனர். அந்தச் சமூக விரோதிகளைக் கண்டுபிடிக்க வேண்டியது காவல்துறையினரின் பொறுப்பு."

``தூத்துக்குடி சம்பவத்தில் இதுவரை பிரதமர் மோடி கருத்தோ ஆறுதலோ கூறவில்லையே..." 

``உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியிருக்கிறார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசியிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே பிரதமரின் குரலாகவே பேசியிருக்கிறார்கள். ஒரு மாநிலப் பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் பிரதமர் குரல் கொடுக்க வேண்டும் என்றால் எப்படி. பேச வேண்டிய விஷயங்களுக்குப் பிரதமர் நிச்சயம் கருத்து சொல்வார்." 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement